உன்னை சரணடைந்தேன் படத்திற்காக தமிழக அரசின் விருதினை வாங்கியவர் மீரா வாசுதேவன்.
ஜெரி ,கத்திக்கப்பல் ,ஆட்டநாயகன் ,அடங்க மறு ஆகிய படங்களில் நடித்திருக்கிற மும்பை நடிகை. மலையாளத்தில்தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார். பிள்ளையார் சுழியே அங்குதான்.!
மோகன்லாலுடன் இவர் நடித்திருந்த தன்மந்திரா படம் நல்ல ஓட்டம் ஓடியது.சிறந்த நடிகை என்கிற பெயரும் கிடைத்தது. அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.ஆனால் இவர் துணை கதாபாத்திரங்களுக்கே தகுதியானவர் என்கிற முத்திரை குத்தப்பட்டது.
ஏனிப்படி ஆகி விட்டது நமது சினிமா வாழ்க்கை என மோட்டுவளையைப் பார்த்து யோசித்த போதுதான் சுளீர் என்று மூளையில் ஒரு வலி.
எல்லாவற்றுக்கும் காரணமே அவரது மானேஜர்தான் என்பது தெரிந்தது.
அவரே என்ன சொல்கிறார் என்பதை கேளுங்கள்.
“நான் மும்பையிலிருந்து வந்தவள் என்பதால் ஆரம்பத்தில் மொழி பிரச்னை இருந்தது .இதனால் எனக்காக ஒரு மானேஜரை நியமித்தேன். அந்த ஆள் சொல்கிற படங்களில் எல்லாம் கதையை கேட்காமலேயே நடித்தேன்.அத்தனையும் தொடர்ச்சியாக பிளாப் .என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு அந்த ஆளை மானேஜராக நியமித்ததுதான் என்பது தெரிந்தது..
எனக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் அவனுக்கு வேண்டிய நடிகைகளுக்கு திருப்பி விட்டிருக்கிறான்.நான் சந்தித்த பெரிய டைரக்டர்கள் எல்லாரும் எனக்குத்தான் வாய்ப்பு அளிக்க விரும்பி இருக்கிறார்கள்.இந்த ஆள் எதோ காரணங்களை சொல்லி தவிர்த்திருக்கிறான் .இதன் பிறகுதான் அந்த ஆளை நீக்கினேன். இப்போது நல்ல வாய்ப்புகள் வருகிறது.” என்கிறார்.