மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக சிறந்தது மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு. இப்போட்டி ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் நடைபெறும்.இந்நிலையில்,இன்று காலை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. உயர்நீதிமன்றம் மதுரை கிளை அறிவுறுத்தலின்படி பாலமேடு ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு கண்காணித்தது. போட்டித் தொடங்கியவுடன் வாடிவாசல் இருக்கும் பகுதிக்கு, கோயில் காளைகள் அழைத்து வரப்பட்டன.
முதலில் சம்பிரதாயமாக கோயில் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. பின்னர்,வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகளை, மாடு பிடி வீரர்கள் துணிச்சலாக எதிர்கொண்டு அடக்கினர். மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்ற இப் போட்டியில், 675 மாடுபிடிவீரர்களும், 669 காளைகளும் பங்கேற்றன.ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினர் சார்பில் உடனுக்குடன் சைக்கிள், குக்கர், கட்டில், அண்டா, கார் போன்ற பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டன.
காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.16 காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்,மாடு முட்டியதில் 23 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், இதில் 6 பேர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.