தமிழ் மொழி தெரியாத ஒரு பெண் இயக்குநர் இயக்கி அதை சர்வதேச அளவுக்கு கொண்டு சென்று தேசிய விருதினை பெற்றுள்ள படம் ‘பாரம்.’
அந்த மூதாட்டியின் பெயர் பிரியா கிருஷ்ணசாமி.
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வாழ்கிற மக்களின் வாழ்வியலை இயல்பாக சொல்லியிருப்பதாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள். உலக பட விழாக்களில் கலந்து கொண்டு பெற்ற பாராட்டுப் பத்திரங்களே பாரம் படத்தின் விசிட்டிங் கார்டாக இருந்து வருகிறது.
தமிழ்ச்சினிமாவின் இளந்துருக்கியர்கள்( யங் டர்க்ஸ்) என்று கருதப்படுகிற இயக்குநர்கள் மிஸ்கின் (சண்முகம் ) ராம் ,வெற்றிமாறன் ,கமலக்கண்ணன்,அருண்கார்த்திக் உள்ளிட்ட பலர் பாரம் படத்தை பற்றி பேசினார்கள். இவர்களுக்கு முன்னதாகவே படத்தைக் காட்டியிருக்கிறார்கள்.
இயக்குநர் மிஷ்கின் பேசினால் அதில் பரபரப்பு இருக்கும்.,புனைவு இருக்கும்.செய்திகளில் முகம் தெரியவேண்டும் என்கிற முனைப்பு இருக்கும். அவரே பத்திரிகையாளர்களைப் பார்த்து இடையிடையே “அது கிடைத்து விட்டதா.தலைப்பு கிடைத்து விட்டதா,இது போதுமா” என்றெல்லாம் கேட்பார். இது அவரது இயல்பு. அன்றும் அப்படித்தான் பேசினார்.
இதோ அவரது பேச்சின் சுருக்கம்.
“இயக்குநர் ராம் என்னை போனில் அழைத்து நாம் எடுக்க ஆசைப்படும் படத்தை ஒருவர் எடுத்திருக்கிறார், வந்து பாருங்கள் என்றார்.
சரி பார்க்கலாம் என்று போனேன். இயக்குநரை பார்த்தவுடன் இந்தப்படம் நல்லாருக்காது என்று முடிவு செய்து விட்டேன்.
இவர் என்ன படம் எடுத்து விடுவார் என்று நினைத்தேன். ஒரு கலைஞனின் வாழ்க்கையே எதிர்பார்ப்பில் தான் இருக்கிறது.
தலைவலியுடன் தான் இந்தப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்த்தபோது என்னை நானெ செருப்பால் அடித்தது போல் இருந்தது.
நான் என்ன படம் எடுக்கிறேன் என கூச்சமாக இருந்தது. படம் பார்த்தவுடன் என் அம்மா அப்பா ஞாபகம் வந்து விட்டது. அவர்களை பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது. என் தந்தை தான் எனக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியவர். அவரை பார்த்து கொள்வதை மறந்து விட்டேன். நம் அம்மா அப்பாவை பார்த்து கொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் படம் இது.
தமிழகத்தில் ஆறு ஏழு நகரங்களில் இந்தப்படத்தின் போஸ்டரை என் செலவில் ஒட்டப்போகிறேன். இது இந்தப்படத்திற்கு எனது நன்றிக்கடன். இந்தப்படம் என்னை மாற்றியது.”என்பதாக பேசினார்.
பொதுவாக மேடையில் சொல்லப்படுகிற வாக்குறுதிகள் அந்த மேடையிலிருந்து பேசியவர்கள் இறங்கிச்சென்றதுமே காற்றில் கலந்து விடும்.
இது எப்படி என்பதை பார்க்கலாம்.!