இசைஞானி இளையராஜாவின் ‘ஊரு விட்டு ஊரு வந்து’ பாடலை அப்படியே பயன்படுத்தியிருந்தார்கள். ‘கப்பல்’ படக்குழுவினர். சமீபத்தில் நடந்த இப்படவிழாவில் இது குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம், ‘அந்த பாடலை நாங்க ரைட்ஸ் கொடுத்துதான் வாங்கியிருக்கிறோம்’ என்று பதிலளித்திருநதார் கப்பல் பட இயக்குனர் கார்த்திக் ஜி கிரீஷ். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இளையராஜா சார்பில் , அவரது வழக்கறிஞர் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் ஜெயராம், இயக்குநர் கார்த்திக் ஜி கிரீஷ், இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம். அதில், எனது கட்சிக்காரர் இளையராஜாவின் ‘ஊரு விட்டு ஊரு வந்து ‘பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளீர்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவின் இசை பாடல்களை இனி ,அகி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை செய்யக் கூடாது என நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றுள்ள நிலையில், அந்த அகி மியூசிக்கிடமிருந்து இந்தப் பாடலைப் பெற்று பயன்படுத்தியிருப்பது நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும். தொடர்ந்து இந்தப் பாடலைப் பயன்படுத்துவதை நிறுத்தும் வகையில் படத்திலிருந்து அந்தக் காட்சியே தூக்கப்பட வேண்டும். தவறினால் எனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் காப்பி ரைட் சட்டப்படி கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளைத் தொடர முடிவு செய்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.