கதை இயக்கம் : ராஜதீப் ,ஒளிப்பதிவு :ராமலிங்கம் , இசை :கணேஷ் ராகவேந்தர் . வசனம்: கபிலன் வைரமுத்து ,சந்துரு மாணிக்கவாசகம் .தயாரிப்பு : ஜெ.எஸ்.பி.சதீஷ் .
விக்ரம் பிரபு ,மகிமா நம்பியார் ,யோகிபாபு ,ஜெகன்,சுப்புராஜ் .
*******************
‘கிளப்டமேனியா ‘ கதை.
கூரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கிற விக்ரம் பிரபுவுக்கு விசித்திர பழக்கம்.
“இல்லீகலாக சேர்த்து வைக்கிற ஆட்களின் கொள்ளைப் பணம்தான் இவரது டார்கெட். அதை கொள்ளையடித்து தன்னுடைய அறை முழுக்க நிரப்பி அழகு பார்க்கிற ஆள். அதை ஏழைகளுக்கு விநியோகிக்கிற ராபின்ஹூட்டும் இல்லை ,அந்த பணத்தில் குபேர வாழ்க்கை வாழ்கிற இழிகுணத்து ஆளும் இல்லை. பணத்தை அடுக்கி அழகு பார்ப்பது மட்டுமே . வி பிரபுவின் குறிக்கோள்.
இதனால் கூரியர் பாய் விக்ரம் பிரபுவின் மீது யாருக்குமே சந்தேகம் வரவில்லை. இந்த கிளப்டமேனியா ஹீரோவுக்கு கைத்தடி ஜெகன். இவர் போலீஸ் டிபார்ட் மென்ட் .இவர் எப்படி ஹீரோவுக்கு துணை? அதுக்கும் காரணம் வைத்திருக்கிறோம்ல.!
ஹீரோவின் காதலியாக பிரைவேட் டிடெக்டிவ் மகிமா .ஸ்டைல் ஸ்மோக்கர் .நாயகி தண்ணி அடிக்கிறபோது தம் அடிப்பது மட்டுமா தப்பாகப் போகுது?சிகரெட் பிடிப்பதிலும் ஒரு நளினம் இருக்குங்க.!
படத்தில் வருகிற ஒரே திரில்லிங் சீன் .ஓடுகிற ரயிலில் புத்திசாலித்தனமாக விக்ரம் பிரபு கொள்ளை அடிக்கிற சீன் மட்டும்தான்.! இதை நடைமுறையில் எப்பவோ சிலர் நியூஸ் ஆக்கிட்டு போயிருக்காங்க .
பிரபலமான யோகிபாபு டீ கடை ஓனர். கடையில் மோடி ,ஓபிஎஸ் படங்கள். எதனுடைய குறியீடு ராசா? இதெல்லாம் சொல்லியா தெரிய வேணும்கிறீங்களா !.
கொள்ளையடிக்கிறவனை கண்டு பிடிக்கிற துப்பு துலக்குகிற போலீஸ் அதிகாரியாக சுப்புராஜ்.
இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களே இவ்வளவுதான்.! இவர்களை வைத்துக்கொண்டு 122 நிமிடங்கள் படம் காட்டுவது என்பது சாதாரண சங்கதி இல்லை. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளராக இருந்த ராஜ தீப்புக்கு சிறப்பாகவே கை வந்திருக்கிறது.
விக்ரம் பிரபு மிக மிக ஹாண்ட் சம் ஹீரோவாக இருக்கிறார். தேர்ந்த நடிகராகிவருகிறார் என்பது பல காட்சிகளில் தெரிகிறது. கசக்கிப் பிழியாத காதல் காட்சிகள் ,
பார்க்கிற பார்வையில் அந்த கேரக்டரின் தன்மையை கொண்டுவருவது வெகு சிலருக்கு மட்டுமே வரும்.எக்ஸ்பீரியன்ஸின் அளவீடு ! சவாலான கேரக்டர்களை விக்ரம் பிரபுவினால் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இந்தப்படம் கொடுத்திருக்கிறது.
மகிமா ,ஜெகன் ,யோகிபாபு ஆகியோரை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு கேரக்டரின் வீரியத்தை குறையவிடாமல் பயன்படுத்தியதற்கு இயக்குநருக்கு வாழ்த்துகள்.
எதிர்பாராதவிதமாக கிளைமாக்ஸ் இருக்க வேண்டும் என்பதற்காக சுப்புராஜைத்தான் பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டுமா?
சினிமா முரசத்தின் மார்க் 3 /5