கேரளத்தில் திரை உலகம் சாதனையாளர்களை இழந்து வருகிறது.
இசை உலகத்தில் ஏஆர் ரகுமான் என்கிற இளம்புயலை முதன் முதலாக அடையாளம் கண்டது மலையாள தேசம்தான்.
பிரபலமாக திகழ்ந்த இசை அமைப்பாளர் மாஸ்டர் அர்ஜுனன்.
அவர் இறந்து இரண்டு நாட்களாகிவிட்டது.
இந்த மனிதர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். படிக்க வசதி இல்லை. இவரையும் சகோதரர் பிரபாகரனையும் பழனியில் இருந்த ஆனந்தாஸ்ரமத்தில் சேர்த்து விட்டார்கள்.
இரண்டாம் வகுப்பு.குருகுலவாசம்.கடுமையான கட்டுப்பாடு. அர்ஜுனனுக்கு இருந்த இசைத்திறமையை அறிந்த ஆசிரமத்தின் தலைவரான நாராயணகுரு அருகில் இருந்த குமரய்யா பிள்ளையிடம் இசையை கற்றுக்கொள்ள சகோதரர்கள் இருவரையும் அனுப்பி வைத்தார்.
“நீ இசையில் சிறந்தவனாக வருவாய் “என்று அர்ஜுனனையும் “,நீ மெக்கானிக்காக வருவாய் “என்று பிரபாகரனையும் இனம் கண்டு வாழ்த்தி வளர்த்தார் குமரய்யா பிள்ளை.
நாடகங்களுக்கு இசை அமைத்து வந்த அர்ஜுனன் மாஸ்டர், பாடகர் ஏசுதாஸையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
அந்த காலத்தில் தமிழ் மலையாள திரை உலகில் சிறந்து விளங்கிய இசை அமைப்பாளர் ஜி.தேவராஜனிடம் கொண்டுபோய் சேர்த்தது.அவரிடம் நல்ல பெயர் வாங்கினார் மாஸ்டர் அர்ஜுனன்.நல்ல சீடனாக இருந்தார்.
விதி வலியது என்பார்கள். அது அர்ஜுனன் மாஸ்டர் விஷயத்திலும் நடந்தது.
தேவராஜன் மாஸ்டர் சென்னையில் இருந்ததால் அவரின் இசையில் அமைந்த டியூனை உடனடியாக மாற்ற விரும்பினார் ஒரு தயாரிப்பாளர்.
அது இயலாத காரியம் என்பதால் சீடனை வைத்து மாற்ற முடிவு செய்தார் தயாரிப்பாளர்.
“முடியவே முடியாது.அது குரு துரோகம் “என மறுத்துவிட்டார் மாஸ்டர்.
தயாரிப்பாளரின் தாங்க முடியாத தொல்லை,அவசர சூழல் வேறு வழியின்றி மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இசை அமைப்பாளர் தேவராஜனுக்கு சொல்ல முடியாத கோபம்.
தன்னுடைய பிரதம சீடனே மாற்றி இருக்கிறான் என்பதை அறிந்து “நீ என்னுடன் பேசக்கூடாது.என்னை பார்க்கக்கூடாது. இன்றோடு முடிந்தது ,நமது உறவு “என்று கடிதம் போட்டு விட்டார்.
துரோகம் பண்ணி விட்டேன் இனி இந்த இசை உலகில் இருக்க மாட்டேன் என ஒதுங்கினார் அர்ஜுனன் .
காலத்தின் கட்டாயம் தேவராஜனும் அர்ஜுனனும் இணைய வேண்டிய நிலை. சேர்ந்தார்கள்.
அந்த காலகட்டத்தில்தான் தனக்கு பக்க பலமாக இருந்த ஆர்கே சேகர் என்பவரை தேவராஜனிடம் சேர்த்து விட்டார். இவர் வேறு யாருமல்லர், ஏஆர் ரகுமானின் அப்பா.
சேகர் திடீரென இறந்துவிடவே தன்னுடைய மகன் திலீப்பை அறிமுகம் செய்து வைக்கும்படி சேகரின் மனைவி கேட்டுக்கொள்ள தன்னுடைய குழுவில் கீ போர்டு வாசிக்க சேர்த்துக்கொண்டார். அப்போது திலீப் வயது 13.
இந்த பொடியனையா வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என கிண்டல் பண்ணியவர்களையும் மீறி திலீப்பை வைத்துக்கொண்டார். அர்ஜுனனின் மெட்டுக்கு கீ போர்டு வாசித்த அன்றைய திலீப்தான் இன்றைய ஏஆர் ரகுமான்.
ஆஸ்கார் நாயகனை அன்றே அடையாளம் கண்டு வளர்த்து விட்ட அர்ஜுன் மாஸ்டர் இன்றில்லை.
இவரை தொடர்ந்து நடிகர் சசி கலிங்கா என்பவரும் நேற்று இறந்து விட்டார்.