மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசுகையில், “கொரோனா நம்முடன் நீண்ட நாட்கள் இருக்கும் என்று விஞ்ஞானிகளும், நிபுணர்களும் கூறுகிறார்கள். 4-வது முறையாக ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 18-ந்தேதிக்கு முன் அறிவிக்கப்படும். மாநிலங்கள் தெரிவித்துள்ள யோசனைகளின் அடிப்படையில் இந்த ஊரடங்கு நீட்டிப்பு புதிய வழிமுறைகளுடன் முந்தைய ஊரடங்குகளை விட வித்தியாசமானதாக இருக்கும். ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ என்ற திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் ரூ. 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், பிரதமர் பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கூறியுள்ள நிலையில், நடிகரும்,மக்கள் நீதிமய்யக்கட்சியின் தலைவருமனா கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது, “இந்திய பிரதமர் மோடி அவர்களே!, உங்களின் அறிவிப்பில் இரண்டு விஷயங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அதிகம் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடமாக உள்ளது .எதிர்காலத்தில் இவையெல்லாம் சரி செய்யப்படும் என்ற நம்பிக்கையும் உள்ளது. தாங்கள் அறிவித்துள்ள பொருளாதார திட்டங்களை நாங்கள் மனதார வரவேற்கிறோம். ஆனால் நம் நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு இவை கொஞ்சமாவது பலனளிக்குமா என்ற ஏக்கத்துடன் உங்கள் அறிவிப்பை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,”உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது.”என பதிவிட்டுள்ளார்.