இயக்குநர் செல்வராகவன். கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன்,தனுஷ் இளைய பிள்ளை. மற்றும் இரு சகோதரிகள்.
செல்வராகவனின் முதல் காதல் மணமேடை ஏறியது .சோனியா அகர்வால் என்கிற நடிகையினால் மனைவியாக நீடித்திருக்க இயலவில்லை. வாழ்க்கையை முறித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். காலியான இடத்துக்கு இன்னொரு வாழ்வரசி கீதாஞ்சலி வாழ வந்து விட்டார்.
இனிமையான இல்வாழ்க்கை.என்ன குறை செல்வராகவனுக்கு?
கண்ணாடி போட்டு மறைத்துக் கொண்டிருக்கிற அந்த குறையைப் பற்றி அவரே சொல்லுகிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 14 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அதில், தற்போது 45 வயதாகும் இயக்குனர் செல்வராகவுனுக்கு 14 வயது சிறுவன் செல்வராகவன் எழுதுவது போல் கடிதம் எழுதியிருக்கிறார்.
” நான் செல்வா( வயது 14) இந்த உலகமே உன் தோற்றத்தை, உன் பார்வை குறைபாட்டை பற்றி கேலியாகப் பேசி சிரிக்கிறது.
எங்கு சென்றாலும் இந்தப் பேச்சு உன்னை நிலைகுலையச் செய்கிறது.
ஒவ்வொரு நாள் இரவும் நீ இதை நினைத்து அழுகிறாய்.
சிலசமயங்களில், ஏன், எனக்கு மட்டும் இப்படி? ஏன், என் பார்வையைப் பறித்துக் கொண்டாய்? என கடவுளிடம் கேட்கிறாய்.
ஆனால், கவலை படாதே செல்வா, இன்னும் சரியாக பத்தே வருடங்களில் நீ எழுதி இயக்கப் போகும் படம் பெரும் வெற்றி அடைந்து, உன் வாழ்க்கையையே மாற்றிவிடும்.
இந்த உலகம் உன்னை மதிப்புடனும், மரியாதையுடனும் பார்க்கத் தொடங்கும்.
அடுத்த பத்து வருடங்களில் தமிழ் சினிமா வரலாற்றில் புது யுக்தியை நீ படைப்பாய். மக்கள் உன்னை ‘ஜீனியஸ்’ என போற்றுவார்கள்.
இப்போது அவர்கள் உன்னை பார்க்கும் உன் பார்வை குறை மறைந்து போய், உனக்குள் இருக்கும் மனிதனை தங்கள் வாழ்க்கையில் அவனின் படைப்புகள் மூலம் தரும் மாற்றத்தை, வியந்து பார்ப்பார்கள்.
கண்ணா, தைரியமாக இரு. கடவுள் உன்னிடமுள்ள சிறப்பானதை பறித்துக் கொண்டால், அதற்கு பதிலாக பல மடங்கு சிறப்பானதை திரும்ப கொடுப்பார்.
சந்தோசமாக இரு. புகைப்படங்கள் எடுக்கும் போது சிரி. இதுவரை அப்படி ஒரு புகைப்படத்தைப் பார்க்க முடியவில்லை.
ஏனெனில் இனி வரும் காலங்களில் உன் புகைப்படங்கள் நிறைய வெளிவரும் உன்னை நீ நேசி.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.என்.ஜி ஓ அமைப்பு ஒன்றின் ஏழு நாள் சவால் நிகழ்ச்சிகாக செல்வராகவன் இக்கடிதத்தை எழுதி இருக்கிறார்