தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்குதல்நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர்.தமிழகம் முழுவதிலும் உள்ள ரஜினி மக்கள் மன்றத்தினரும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில்,கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி வரும் தனது மன்றத்தினருக்காக ரஜினிகாந்த் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுளளார். அதில் கூறியிருப்பதாவது,
“கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்குப் பட்டிருக்கும் கரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்குப் பல கடுமையான வேதனைகளைத் தரும்.
உங்களது குடும்பத்தாரின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களைப் பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக் கவசத்தை அணியாமலும் இருக்காதீர்கள்.
ஆரோக்கியம் போச்சுன்னா! வாழ்க்கையே போச்சு!!”
இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.