ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்கிற கதையாகி இருக்கிறது நாட்டு நிலைமை.! கண்ணுக்குத் தெரியாத கொரானா சீனத்தில் இருந்து புறப்பட்டு இந்தியா உள்பட பெரும்பாலான உலக நாடுகளை அசைத்துக் கொண்டிருக்கிறது..வல்லரசுகள் உள்பட!
இந்தியாவின் பொருளாதாரம் படு பாதாளத்தில்! போதாக்குறைக்கு சைனாவின் அத்துமீறல் மிகுந்த கவலையைத் தருகிறது.
திரை உலகம் மிகவும் மோசமாகி விட்டது. முன்னொரு காலத்தில் படங்களின் 100 வது நாள் கொண்டாடியவர்கள் தியேட்டர்களை மூடி 100 நாட்களை கடந்து விட்டார்கள்.
ஜூலையில் திறந்து விடலாம் என்று நம்பியிருந்தார்கள் .ஆனால் அக்டோபரிலாவது சொர்க்கவாசல் திறக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள்.
ஜூலை இரண்டாம் வாரத்தில் சென்னையில் கொரானா தொற்று ஒன்னரை லட்சத்தைத் தாண்டும் ,1600 சாவுகள் இருக்கலாம் என்று தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கணித்திருக்கிறது. அக்டோபர் மத்தியில் கொரானா உச்சம் தொடும் என்கிறார்கள்.
தீபாவளிக்காவது படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் .ஆனால் மும்பை டெல்லி ,சென்னை ஆகிய முக்கிய நகரங்களில் கொரானாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. ஆதிக்கம் குறையுமேயானால் அக்டோபர் கடைசி அல்லது தீபாவளி நாளான நவம்பர் 14க்கு முன்பாக தியேட்டர்கள் திறக்கப்படலாம்.
மால் தியேட்டர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை .ஐநாக்ஸ் ,பிவிஆர் ஆகிய நிறுவனங்கள் தியேட்டர்கள் மூடிக்கிடந்த காலத்துக்கு வாடகை தரமுடியாது என்று சொல்லிவிட்டன .இதற்கு ஒரு பஞ்சாயத்து நடக்கலாம்.
சுகாதாரத்துறை அறிவுரைப்படி தியேட்டர்களில் சீட்டுகள் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படலாம். அரசு நிர்ணயம் செய்த வரிகளை பற்றிய விவகாரம் வேற இருக்கிறது. அரசு இறங்கிவருமா என்பது தெரியவில்லை.
இத்தனை பிரச்னைகளைத் தாண்டி தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும்.!