வேகமாக பரவி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகின்றன.வேலையின்றி தவித்த சின்னத்திரை கலைஞர்கள் பலரும் மத்திய,மாநில அரசுகளுக்குகோரிக்கை விடுத்தநிலையில், தெலுங்கு டி .வி. தொடர்களின் படப்பிடிப்புகளுக்கு அம்மாநில நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளித்தது. இந்நிலையில், தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி தொடர்களிலும் நடித்துள்ள நடிகை நவ்யா சாமி, ‘நா பேரு மீனாட்சி’ என்ற தெலுங்கு தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வந்தார்.இந்நிலையில், இவருக்கு தலைவலி மற்றும் காய்ச்சல் அறிகுறி காரணமாக கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.இதில், நடிகை நவ்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.இது அப்படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து நடிகை நவ்யா சுவாமி பேசுகையில்,, ‘கடந்த 4 நாட்களாக உடல் சோர்வு, தலைவலி இருந்து வந்தது. அதனால் உடனடியாக கொரோனா சோதனை செய்து கொண்டேன். மேலும் என்னை நான் முழுமையாக தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டேன்.ஆனால், தற்போது எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. சக நடிகர்களையும் பிரச்சனையில் சிக்க வைத்துவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சியுடன் என்னால் தூங்க முடியவில்லை.இரவு முழுவதும் கதறி அழுதேன். படப்பிடிப்பு நடத்த இது பாதுகாப்பானச் சூழல் இல்லை. டிவி துறையில் போட்டி அதிகம் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் சீரியலை கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் படப்பிடிப்பு நடந்தது. நான் இந்தத் துறையில்தான் இருக்கிறேன். அதனால் வர முடியாது என கூறவில்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டேன். ஆனாலும் என்னை கொரோனா வைரஸ் தொற்றி விட்டது’ என்று கூறியுள்ளார்.இந்நிலையில் தமிழகத்தில் வரும் 8 ம் தேதி முதல் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கும் என பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது