நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் ,லிங்கா படத் தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷ். இவர் பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனநம்பப் படுகிறது.
ராக்லைன் வெங்கடேஷ். தமிழில், சிம்பு நடித்த தம், விக்ரம், பசுபதி, அசின் நடித்த மஜா, ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்த லிங்கா உட்பட சில படங்களைத் தயாரித்துள்ளார் .
இந்தி மற்றும் தெலுங்கிலும் பல படங்களைத் தயாரித்துள்ள இவர், சில படங்களில் நடித்தும் உள்ளார். தமிழில் பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஜோதிகா நடித்த நாச்சியார் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இவருக்குத் திடீரென்று உடல் நிலை குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பது பற்றி உடனடியாகத் தகவல் தெரிவிக்கப் படவில்லை.
அவர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நடிகையும் எம்.பியுமான சுமலதா அம்பரீஷ் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர், இவர்.
இருவரும் கடந்த சில வாரம் நடிகர் அம்பரீஷுக்கு நினைவகம் அமைப்பது தொடர்பாக, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவை சந்தித்தனர்.இந்நிலையில், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும்,தன்னைச் சந்தித்த நபர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நடிகை சுமலதா தெரிவித்திருந்தார். அதனால், ராக்லைன் வெங்கடேஷும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும், அதன் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது
.நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான ராக்லைன் வெங்கடேஷ் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையில், அவர் மகன் அபிலாஷ் மருத்துவராகப் பணியற்றி வருகிறார். அவர், வெங்கடேஷுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். பிரபல மூத்த நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தயாரிப்பாளர் ஒருவரும் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கன்னட சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.