ரசிகர்கள் அன்புடன் ‘சூர்யா அண்ணா’ என்று அழைக்கிற சூர்யாவுக்கு வருகிற 23 -ஆம் தேதி 45 -ஆவது பிறந்த நாள்.
முன்னணி நடிகர்களின் வரிசையில் கண்ணியமான இடத்தை பிடித்துவைத்திருக்கிறவர். சமூக ரீதியான கவலைகள் இவருக்கு உண்டு. அது அவ்வப்போது வெளிப்படும். பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறவர்.அதே நேரத்தில்அந்த உணர்வுகள் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கிறதா என எடை போடுவதற்கும் தயங்கியதில்லை. இவரது தந்தை சிவகுமார் தொடங்கிய அகரம் என்கிற கல்வி சார்ந்த அமைப்பு இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு சூர்யாதான் காரணம்.
1997 -ல் இவரது திரைப்பயணத்துக்கு வழி அமைத்துக்கொடுத்தவர் இயக்குநர் வசந்த். நேருக்கு நேர் படம்.
ஒரு மாபெரும் கலைஞன் இவருக்குள் இருக்கிறார் என்பதை அறிந்து அதை வெளிக் கொணர்ந்தவர்கள் இயக்குநர்கள் பாலாவும் அமீரும்!
பாலாவின் நந்தா ,அமீரின் மவுனம் பேசியதே இவ்விரண்டும் சூர்யாவின் பன்முகத்திறனை வெளிப்படுத்தின.
பிதாமகன் உச்சக்கட்டத்தில் ஆண் பெண் இருபாலரையும் கண்ணீர் விட வைத்து கனத்த இதயத்துடன் வெளிவரச் செய்தார் சூர்யா. அவரது முடிவு இப்படித்தான் இருக்கும் என்று யார் எதிர்பார்த்தது. உன்னால் முடியும் என்கிற நம்பிக்கையில்தான் பாலா கிளைமாக்ஸை அமைத்திருந்தார்.
காக்க காக்க ,கஜினி ,வாரணம் ஆயிரம் ,அயன் ,சிங்கம் உள்ளிட்ட எத்தனையோ படங்கள் சூர்யாவின் ஆற்றலை வெளிப்படுத்தின. சூரரைப் போற்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிற படம்,அடுத்து ஹரியின் அருவா,வெற்றிமாறனின் வாடிவாசலில் இரட்டை வேடம் ,பாண்டிராஜ் ,லோகேஷ் கனகராஜ் ஆகியோரின் வித்தியாசமான படைப்புகள் இப்படி அனைத்துமே மாறுபட்ட ,வேறுபட்ட கதைக்களம் . திறமையான வீரனுக்கு அது எந்தக் களமாக இருந்தால் என்ன ,துள்ளி வருகுது வேல் விலகிப்போ பகையே !
வழக்கம்போல ரத்ததானம் போன்ற சேவைகளை செய்ய முடியாத அளவுக்கு கொரானா தடை போட்டு நிற்பதால் இணையதளங்கள் வழியாக சூர்யாவின் ரசிகர்கள் அமர்க்களம் பண்ணப்போகிறார்கள். கவுதம் வாசுதேவ மேனன் ‘காம்மன் டிபி ‘யை வெளியிடுகிறார் வாழ்த்துகள்.