சமூக வலைதளத்தங்களில் மிகவும் ஆர்வம் காட்டும் உலகநாயகனின் வாரிசு,நடிகை, பாடகி ஸ்ருதி ஹாசன்,தற்போது தன்னைப் பற்றி ரசிகர்கள் இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொள்ளளும் வகையில், புதிய தளத்தில் தடம் பதிக்கிறார்.
ஆமாம் அவரும் யூ டியூப் சேனலுக்கு வந்திருக்கிறார்.
ஆரோக்கியம், உடற்பயிற்சி, சமையல்கலை, ஒப்பனை குறிப்புகள் என தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வரும் ஸ்ருதி, தனது இசை சுற்றுப் பயணத்திலிருந்து இதுவரை யாரும் பார்த்திராத காணொலிகளையும், தான் மெட்டமைத்திருக்கும் பாடல்களின் முன்னோட்டங்களையும் தனது யூடியூப் சேனல் வழியாக வெளியிடவிருக்கிறார்.
இது குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில், “சமூக ஊடகத்தில் ரசிகர்களுடன் உரையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து இயங்கும் ஒரு யூடியூப் சேனல் தான் அடுத்த சரியான படியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனது அசல் படைப்புகள் , எனது இசை நிகழ்ச்சிகளின் காணொலிகள், இசை நிகழ்ச்சிகளுக்கு பின்னால் நடந்த ஏற்பாடுகள் குறித்த காணொலிகள் என அனைத்தும் என் யூடியூப் சேனலில் இருக்கும்” என்கிறார்.