
தமிழ்க்கடவுள் முருகனுக்கே பாதுகாப்பில்லை என்கிற அளவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கந்த சஷ்டி கவசம் பற்றி பெரிய பட்டி மன்றமே நடந்தது. முருகனுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கூட இந்த பிரச்னையை கையில் எடுத்திருந்தார்கள்.
‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவுப்படுத்தும் வகையில் விரிவுரைகள்.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தது. பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காலம் கடந்து அவரது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனல் முடக்கப்பட்டதோடு அதன் நிர்வாகிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் யார் பேசினாலும் கடும் நடவடிக்கை பாயும் என அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில்,தேமுதிக தலைவர் விஜயகாந்த், கந்த சஷ்டி கவசம் படிக்கும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, அதில், ‘‘ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்றுஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம்’’ என தெரிவித்துள்ளார்.இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.












