விக்கிரமாதித்தன் வேதாளம் கதையாகி விட்டது சுஷாந்த் சிங்கின் மரணம், மேலும் இரு மாநில போலீசாரையும் மோத விட்டுக்கொண்டிருக்கிறது.
தலைவி பட ஷூட்டிங் தொடங்கும்வரை கங்கனா ரனாவத்தும் விடமாட்டார் போல.!
மராட்டிய மாநில முதல் மந்திரியையும் மகனையும் கூட விட்டு வைக்கவில்லை. அவர்களுக்கும் சுஷாந்த் சிங் மரணத்துக்கும் தொடர்பு இருக்கிறது என்கிற வகையில் தாக்குதலை தொடர்ந்து இருக்கிறார்.
இதுநாள் வரை வாயை மூடிக்கொண்டிருந்த ஆதித்ய தாக்கரே தற்போதுதான் வாயைத் திறந்திருக்கிறார். இவர் முதல்மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகன்.
“எனக்கும் சுஷாந்த் சிங் மரணத்துக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. யாருடைய மரணத்துக்காகவோ என்னை தொடர்பு படுத்திப்பேசுவது எதிர்க்கட்சிகளின் அசிங்க அரசியல்.அரசியல் ஆதாயத்துக்காக அப்படி பேசுகிறார்கள்”
இப்படி சொன்னால் விட்டு விடுவாரா கங்கனா?
“ஹா..ஹா..! (சிரிப்பு ! ) யாரெல்லாம் அசிங்க அரசியல் பற்றி பேசுகிறார்கள் பாருங்கள்.! உங்க அப்பா எப்படி முதல்மந்திரி ஆனார் என்பது அசிங்க அரசியல் பேசும் உங்களுக்கு தெரியுமா? சரி அதெல்லாம் மறந்து விடுவோம். சுஷாந்த் மரணம் பற்றிய சில கேள்விகளுக்கு உங்க அப்பா பதில் சொல்லட்டும்.!
ரியா எங்கே?
சுஷாந்த் துர்மரணம் பற்றி மும்பை போலீஸ் ஏன் எப்.ஐ.ஆர் போடவில்லை?
சுஷாந்தின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்கிற புகார் பிப்ரவரியில் இருந்திருந்தும் அந்த மரணத்தை எப்படி தற்கொலை என மும்பை போலீஸ் சொல்கிறது?
தனிமைப்படுத்தல் என்று சொல்லி ஐ.பி.எஸ்.அதிகாரி வினய் திவாரியை அடைத்து வைத்தது ஏன் ?
ரியாவும் அவரது குடும்பத்தினரும் சுஷாந்தின் பணத்தை சுருட்டியது எப்படி?
இந்த கேள்வியெல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்டது .
இப்படியெல்லாம் கேட்டிருக்கிறார் கங்கனா ரனாவத் .சுஷாந்தின் மரணம் யார் யாரையோ சுற்றி வளைக்கிறது. பெரிய புள்ளிகள் மறைந்து இருந்து மரணத்தை முடித்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.