பொதுவாக திராவிட இயக்கங்களில் உட்கட்சி சண்டை என்பது பொதுக்குழுவில்தான் வெளிப்படும். இதுதான் வழக்கம். ஆனால் இது கொரானா காலம் என்பதால் செயற்குழுவில் வெடித்திருக்கிறது போலும்.! பொதுக்குழு என்றால் சட்டை கிழிந்து ,வேட்டி அவிழ்ந்து ரத்த அடையாளங்களுடன் வெளிவருவார்கள். கட்சி உடைவதே பொதுக்குழுவில்தான்.!
எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா இருந்தவரை உட்கட்சி மோதல் என்பது கட்சித் தேர்தலில்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்திருக்கிறது. தற்போது இரு பெரும் தலைகளுமே இல்லை. சட்டாம்பிள்ளை சசிகலாவும் ஜெயிலில் !
அதனால் அடுத்த முதல்வர் நானா நீயா என்கிற சண்டை ஆரம்பமாகியிருக்கிறது.
செயற்குழுவுக்கு வந்த ஓபிஎஸ்,இபிஎஸ் ஆதரவாளர்கள் மல்லுக்கட்டாத குறையாக கோஷங்களை எழுப்பி உட்கட்சி சண்டையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார்கள். ஓபிஎஸ்ஸுக்கு ஆளுயர பிரமாண்ட மாலை,வீரவாள் என அமர்க்களப்படுத்திவிட்டார்கள்.
செயற்குழுவில் இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பில் அவரது ஆதரவாளர்கள் வந்திருந்தார்கள்.
ஆனால் பன்னீர்செல்வம் குழுவினர் அதை தகர்த்து எறிந்து விட்டார்கள்.யார் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்படாமலேயே செயற்குழு கலைந்திருக்கிறது .
டெல்லி மேலிடம் என்ன முடிவு எடுக்கக்காத்திருக்கிறதோ ,தெரியவில்லை.
“இதுவரை முதல்வராக இருந்தது போதும் .கழண்டுக்குங்க !” என்று இபிஎஸ்ஸை ஒதுங்க சொல்லிவிட்டு ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக நிற்குமா, அல்லது எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன என்று வேடிக்கை பார்க்குமா என்பது தெரியவில்லை. அவர்களின் நம்பிக்கை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான்.! அமித்ஷா என்கிற சாணக்கியரின் சாகச மூளை எப்படி சதுரங்க காய்களை நகர்த்துமோ தெரியாது.!
ஆனால் அந்த சாணக்கியருக்கு நிகரான மூளைக்கார அம்மா சின்னம்மா .இவர் வெளியில் வந்தால் என்ன நடக்கும் என்பது கணிக்க முடியாதது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அமித்ஷாவின் அதிகார மையம்தான் அவரது பலம். யாரையும் புரட்டிப்போட்டுவிடக்கூடிய வலிமை அந்த மையத்துக்கு இருக்கிறது. ப.சிதம்பரத்தை திகார் ஜெயிலில் அடைத்து தங்களின் வன்மத்தை காட்ட உதவியாக இருந்தது அதிகார மையம்தானே! வெளியில் வந்த சிதம்பரத்தின் மீது என்ன குற்றம் சாட்ட முடிந்தது?
அதனால் அதிமுகவில் என்னதான் அடிதடி நடந்தாலும் சிண்டு என்னவோ பிஜேபி கையில்தான்.!