முட்டல் .மோதல் இல்லாமல் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நிர்வாகிகள் தேர்வு எந்த காலத்தில் நடந்திருக்கிறது,தற்போது நடப்பதற்கு?
நேற்றுத்தான் வேட்பு மனு தாக்கல் .இன்று புகார் மனு தாக்கல்.!
இதோ ஒரு பார்ட்டியின் மனு.
24.10.2020
சென்னை
அனுப்புநர்
R.சிங்காரவடிவேலன்,
உறுப்பினர் எண் : 1824,
M/s.மதுக்கூர் மூவி மேக்கர்ஸ்,
பிளாட் நம்பர் : A8,
ஸ்ரீனிவாசா அடுக்ககம்,
அருணாச்சலம் ரோடு, சாலிகிராமம்,
சென்னை – 600 093.
தொலைபேசி எண்: 8754756001 / 9940389335.
பெறுநர்
நீதியரசர் உயர்திரு.ஜெயச்சந்திரன் அவர்கள்,
தேர்தல் நடத்தும் அதிகாரி,
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,
அண்ணா சாலை,
சென்னை.
ஐயா,
பொருள் : திரு.ராதா கிருஷ்ணன், திரு.கதிரேசன் மற்றும் திரு.சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோரை தகுதி நீக்கம் செய்வது குறித்து.
வணக்கம். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் 1975 ஆம் ஆண்டின் கீழ் பதிவு செய்யப்பட்டது என்பது தாங்கள் அறிந்ததே. நமது சங்கத்தின் விதிமுறைகள் அனைத்தும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975 க்கு உட்பட்டது.
தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975 விதி எண் 58ன் படி, சங்கத்தின் சார்பில் ஒரு அறிவிப்பு கொடுக்கப்படுமேயானால், அந்த அறிவிப்பு அன்றைய தேதியிலிருந்தே அமலுக்கு வந்து விடுகிறது. அதன்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தலையும், தேர்தலுக்கான அட்டவணையையும் கடந்த 09-10-2020 தேதியிலும், தேர்தல் விதிகளை 15-10-2020 அன்றும் வெளியிட்டீர்கள்.15-10-2020 அன்று உங்களால் வெளியிடப்பட்ட விதிமுறைகளில், விதி எண் 2ல் ” சங்க விதிமுறை எண் 13 ன் படி கடந்த 5 ஆண்டுகளுக்குள் நேரடி தமிழ்படம் தயாரித்து, வெளியிட்ட தயாரிப்பாளர் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் தலைவர், துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் ஆகிய நிர்வாகக்குழு பதவிகளுக்கு போட்டியிடும் உரிமை உண்டு ” என குறிப்பிட்டுள்ளீர்கள்.
உங்கள் அறிவிப்பின்படி 15-10-2015 முதல் 14-10-2020 வரை உள்ளடக்கிய ஐந்து ஆண்டு காலத்திற்குள் ஒரு தயாரிப்பாளர் படத்தை தயாரித்து அதனை வெளியிட்டிருந்தால் மட்டுமே நிர்வாகக்குழு பதவிகளுக்கு போட்டியிட முடியும்.
இந்த விதிகள் மற்றும் உங்கள் அறிவிப்பின்படி 09-10-2020 முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்து விடுவதாலும், 15-10-2020 அன்று நீங்கள் வெளியிட்ட விதிகளின் படி, 14-10-2020க்கு பிறகு படத்தை திரையிட்டவர்கள் நிர்வாகக்குழு பதவிகளுக்கு போட்டியிடும் தகுதியை தானாகவே இழந்து விடுகிறார்கள்.
இந்நிலையில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.ராதா கிருஷ்ணன், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு.கதிரேசன், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தங்களது படங்களை 14-10-2020 தேதிக்கு பிறகு வெளியிட்டிருப்பதால் இந்த 2020-2022 ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் தகுதியை தானாகவே இழக்கிறார்கள்.
எனவே ஐயா அவர்கள் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975ன் விதிகளின் படியும், உங்களால் வெளியிடப்பட்ட தேர்தல் விதிகளின்படியும் மேற்கண்ட மூன்று நபர்களின் வேட்பு மனுக்களையும் நிராகரிக்கும் படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.” என்று சிங்காரவேலன் என்பவர் புகார் மனு செய்திருக்கிறார்.
விடுவாரா தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ?
இவர் சும்மா இருந்தாலும் பி.ஆர்.ஓ .சங்கத்தலைவர் விஜய முரளி சும்மா இருப்பாரா?
கொளுத்திப்போட்டுவிட்டார்கள்.!
“சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக உள்ள டி .ராஜேந்தர், செயலாளராக உள்ள மன்னன், செயற்குழு உறுப்பினராக உள்ள கே.ராஜன் ஆகியோர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவராக – T.ராஜேந்தர், கௌரவ செயலாளராக – மன்னன், பொருளாளராக – கே.ராஜன் ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்
இது சங்க விதிமுறைகளின்படி விதிமீறல் எனவே இவர்களது வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் தேனாண்டாள் முரளி ராமசாமி தலைமையிலான அணியின் சார்பில் ராதாகிருஷ்ணன், சிவசக்தி பாண்டியன், சந்திரபிரகாஷ் ஜெயின் புகார் மனு கொடுக்கவுள்ளனர் என ஒரு தகவல் கிடைத்திருக்கிறது
அதிகாரபூர்வமாக பொதுக்குழு கூட்டம் நடத்தி சங்க விதிமுறைகள் மாற்றத்துக்கு ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு செய்யாமல் செயற்குழுவில் சங்க விதிமுறைகளில் மாற்றம் செய்வது முறைகேடானது எனவே தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் T.ராஜேந்தர், மன்னன் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சென்னை காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் சங்க முக்கிய உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள் போர்கொடி தூக்கியுள்ளனர் இதன் தொடர்ச்சியாக தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுக்கவும் உள்ளதாக தகவல்.
ஆனால் இது உண்மையா என்பதை இதுவரை உறுதி செய்யவில்லை. இம்மாதிரியான செய்திகளை கிளம்பிவிட சிலர் இருப்பதால் நமக்கு சந்தேகம் இருக்கிறது.