
நான்காவது ஊதியப் பட்டை அளிக்கப் படவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துப் போராடினர் நம் அரசு மருத்துவர்கள். அனைத்துத் தரப்பும் நியாயம் என்று ஒப்புக் கொண்ட போன வருடப் போராட்டம் அது.
செயலாளர் பேச்சுவார்த்தை, அமைச்சர் வாக்குறுதி என்று நீண்ட நாடகம், ‘தாயுள்ளத்தோடு முதல்வர் அளித்த உறுதி’ என்னும் க்ளைமாக்ஸோடு முடிந்தது. இடையில் வந்த பெருந்தொற்றில் போராட்டத்தை மறந்து, உயிரையும் பணயம் வைத்து மக்களையும், அரசின் மானத்தையும் காத்தனர் அரசு மருத்துவர்கள்.
ஒரு வருடம் ஆகியும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கலங்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்?

‘தகவல் அறியும் உரிமை’ கிடைத்த போது, அது ஆட்சியாளர்களின் தாக்குதலைத் தடுக்கும் கேடயம் என்று மகிழ்ந்தோம். சமயத்தில் தட்டிக்கேட்க உதவும் ஆயுதம் என்றும் இருந்தோம். ஆரோக்கிய சேது ஆப் விவகாரத்தில் தகவல் தரும் அமைப்பே தவறு என்று புரிந்தது.
அதை உருவாக்கியவர் யாரென்றே தெரியாதென அதிகாரவர்க்கமே கைவிரித்தது. மறுநாளே அரசின் அறிக்கை அதை மறுத்தது. ஆயுதம் வெற்றுக்காகிதம் ஆனது. சத்யமேவ ஜெயதே எனமுழங்கும் நாட்டில் சாதாரண உண்மையை அறிந்து கொள்ளக்கூட எங்கேபோவது?சேது விவகாரத்தில் இத்தனைக்குளறுபடிகள் ஏன்?யாரிடம் தகவல்கேட்பது?