அளந்து காலடி வைத்துக்கொண்டிருக்கிறது மக்கள் நீதி மய்யம்.
சட்டப்பேரவைக்கான மாநிலம் தழுவிய தேர்தலை அவர்கள்,முதன்முறையாக சந்திக்கப் போகிறார்கள்.1967 க்குப் பிறகு தமிழகத்தின் அரசியல் வரைபடம் மாறிவிட்டது.
இன்றைய நாள் வரை திராவிடக்கட்சிகள் இரண்டும் வலிமையுடன் இருக்கின்றன. ஆட்சி பீடத்தை விட்டு விடக்கூடாது என்று ஒரு இயக்கமும், இழந்த ஆட்சியை மீட்டேயாகவேண்டும் என்கிற கட்டாயத்தில் இன்னொரு இயக்கமும் முனைப்புடன் இருக்கின்றன.
திமுக ,அதிமுக ஆகிய அந்த இரண்டு இயக்கங்களைச்சார்ந்தே மாநிலத்தின் இதர கட்சிகளும் தேசிய கட்சிகளும் தங்களது இடங்களுக்காக போரிடவிருக்கின்றன.
இந்த நிலையில்தான் ,
“கழகங்களுடன் கூட்டணியில்லை . மக்களுடன் மட்டுமே மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் , மூன்றாவது அணி அமைப்பதற்கான தகுதி தங்கள் கட்சிக்கு வந்து விட்டதாக”மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியதின் பின்னணி என்னவாக இருக்கும் என்கிற பரபரப்பான தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என பரபரப்பாக இயங்கி வருகின்றன.
பா.ஜ.க .,காங்கிரஸ் ,பாமக,தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமில்லாமல், இது வரை ஆட்சி அதிகாரங்களை காணாத சீமானின் நாம் தமிழர் கட்சி,கமல்ஹாசனின் மக்கள்நீதிமய்யம் உள்ளிட்ட கட்சிகளும் முனைப்புடன் செயலில் இறங்கியுள்ளன.
இக்கட்சிகளால் உடனடியாக ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்புகள் இல்லையென்றாலும் ஆட்சியை பிடித்து விடும் கனவுகளுடன் வலம் வரும் இரண்டு திராவிடக் கட்சிகளின் கனவுகளை கலைப்பது அல்லது நெருக்கடி கொடுப்பது என்பதை மிக தெளிவாகவே அறிந்திருக்கின்றன..
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி 1.07 விழுக்காடு வாக்குகளை பெற்று இருந்தது.
அதே தேர்தலில் திமுக தனது வெற்றி வாய்ப்பை 1.31 விழுக்காடு வித்தியாசத்தில் இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்,தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக கால் ஊன்ற வேண்டும் என்றால் பி.ஜெ.பி.க்கு ரஜினியின் தயவு தேவை.
“ஒரே ஒரு முறை, அதாவது இந்த ஒரு முறை மட்டும் ரஜினி ஆதரித்தால் போதும், இரட்டை இலக்கத்தில் வெற்றி கிடைத்துவிடும். அதை வைத்து அடுத்த முறை மூன்று இலக்கத்திற்கு கொண்டு சென்றுவிடலாம்” என்பது டெல்லி பாஜகவின் சாணக்கிய கணக்கு.
ஆனால் அந்த கணக்கு பொய்யாகிப் போய்விட்டது.
ரஜினியின் நவம்பர் மாத அரசியல் அறிவிப்பை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருந்தது. ரஜினிகாந்த் பெயரில் “அரசியலுக்கு முழுக்கு” என்ற ரீதியில் வெளியான பரபரப்பு அறிக்கையும், அதைத்தொடர்ந்து “அது எனது அறிக்கை அல்ல. ஆனால் அதில் சொன்னபடி எனது உடல் நிலை குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மையே” என்ற ரஜினிகாந்தின் ‘டுவிட்’டும் பாஜகவின் ஆசையை இடித்து தவிடு பொடியாக்கி விட்டது. சமீபத்தில் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்த குருமூர்த்தியும் அவரது துக்ளக் இதழில் அட்டைப்பட கார்ட்டூன் வழியாக ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதை சூசகமாக உறுதிப்படுத்திவிட்டார்.
ரஜினியின் அறிவிப்பு மக்கள் நீதி மய்ய இயக்கத்துக்கு வலுவான நிலையைக் கொடுத்திருக்கிறது.
கமல்ஹாசனின் பேச்சிலும் அறிக்கைகளிலும் அவரது நம்பிக்கையை உணர முடிகிறது.
வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்கும் நோக்கில், கடந்த 3 நாட்களாக தனது கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் ,
“திராவிடம் எனக்கு பிடிக்கும். நாடு முழுவதுமே திராவிடம் உள்ளது. தேசிய கீதத்தில் திராவிடம் இருக்கும் வரை அது அழியாது.ஆனால் எனது கொள்கை, திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதுதான்.சட்டசபைத் தேர்தலில் கழகங்களுடன் கூட்டணியில்லை . மக்களுடன் மட்டுமே மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் , மூன்றாவது அணி அமைப்பதற்கான தகுதி தங்கள் கட்சிக்கு வந்து விட்டதாகவும்” கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அதாவது அதிமுக,திமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் நீங்கலாக உள்ள தமிழக கட்சிகளை இணைத்து, மூன்றாவது அணி அமைத்து போட்டியிடுவது என்றும், இல்லையென்றால் தனித்து போட்டியிடுவது என்றும் கமல் முடிவெடுத்து விட்டார் என்கிறார்கள். ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் ஆரம்பகால அரசியலில் தனித்து போட்டியிட்ட விஜயகாந்தின் தாரக மந்திரமே மக்களுடன் தான் கூட்டணி என்பதாகும். அதுவே அவருக்கு வாக்காளர்களை, வாக்குகளை அதிகரிக்க செய்தது.அதுவே அதிமுகவுடன் கூட்டணிக்கும் வித்திட்டு , 41 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக, 29 இடங்களில் வெற்றிபெறவும் வழிவகுத்தது.பின்னாளில் அக்கட்சியின் வாக்கு சதவீதத்திற்காகவே அதிமுக, திமுகபோன்ற பெரிய கட்சிகள் கூட்டணி பேரத்தில் இறங்கின என்பதையும் மறுப்பதற்கில்லை.
விஜயகாந்தின் இந்த ‘மக்களுடன் கூட்டணி’ என்கிற அஸ்திரமே, கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனது மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில் 6 சதவீத வாக்குகளை பெற்றுள்ள கமல்ஹாசனுக்கு, வருகிற சட்டசபை தேர்தலிலும் வாக்குகளை, வாக்காளர்களை அதிகரிக்க செய்யலாம் ,
அதன் மூலம் பெரிய இரண்டு கட்சிகளின் வெற்றி தோல்வியை தனது கட்சியாலும் முடிவு செய்ய முடியும் என்பதாலேயே, முதல்வர் என்பது எங்களின் நோக்கமல்ல. எதிர்கால சிந்தனையே முக்கியம் என கருதும் கமல்ஹாசன் தற்போது மிகவும் தெளிவாகவே ‘மக்களுடன் கூட்டணி’ என்கிற அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் என்கிறார்கள்