ட்ராப் சிட்டியின் பாடல்கள் ரசிகர்கள் மீது இசை சுனாமியாக இறங்கி அவர்களை ஆர்ப்பரிக்கச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்தப் படத்தில் முதன்மைத் தனிப்பாடலான, ‘பேரனாய்ட்’ (அச்ச உணர்வு) பாடலில் அட்லான்டாவைச் சேர்ந்த ராப் இசைப் பாடகி சா-ராக், ஒமர் குட்டிங், இசையமைப்பாளர், பாடகர் ஜி.வி.பிரகாஷ் குமார் என மூன்று கலைஞர்கள் இணைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 6.30 நிமிடங்கள் ஒலிக்கும் பேரனாய்ட் பாடல், ட்ராப் சிட்டி படத்தின் முக்கியப் பாடல். ட்ராப் சிட்டி திரைப்படத்தின் டீஸரும் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம், கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு எதிரான போலீஸ் அராஜகத்தை எடுத்துரைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
பாடலுக்கு அதன் வரிகள் வலிமை சேர்த்துள்ளது . முதன்முறையாக மேற்கத்திய பாடலில் தமிழில் வரிகள் அமைந்துள்ளன. ஜி.வி.பிரகாஷ்… கண்ணே கண்ணே.. எனப் பாடலில் கசிந்துருகும் போது அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்கிற வலியுறுத்தல், அவரது குரல் மூலம் வலுவாகப் பதிவாகிறது.
அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே ஆங்காங்கே காவல்துறையின் அடக்குமுறை எல்லை மீறிக்கொண்டிருக்கும் தருணத்தில் இந்தப் பாடலின் கருவும் அதன் வரிகளும் அப்படியே பொருந்திப் போகின்றன. அமெரிக்காவின் ப்ளாய்டுக்கு நேர்ந்தது போல் தென் தமிழகத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பாடல் உலகம் முழுவதும் இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறது.
பேரனாய்ட் உருவாக்கம் குறித்து ஏடிஜி பேசுகையில், “நான் ஜெர்மன் இசைக்கலைஞர் ஹான்ஸ் ஸிம்மரின் இசையால் ஈர்க்கப்பட்டு இப்பாடலை உருவாக்கியுள்ளேன். இசைக்கருவிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதே அளவுக்கு குரல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் வியக்கும் 3 இசைக் கலைஞர்களும் தங்களின் பணியை மிகவும் நேர்த்தியாகச் செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
.
“நான் இந்த உலகைப் பார்க்கிறேன்.. அது என் மீது சுமத்தப்பட்ட அடையாளத்தைக் காட்டி மிரட்டுகிறது.. எனக்கு எங்கெங்கும் அவல ஒலி கேட்கிறது.. அந்த ஒலி என்னை அச்சப்படச் செய்கிறது.. “என்ற பாடலின் வரிகள் மிக ஆழமானதாக அமைந்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில்.., “ஒமர் குட்டிங், சா-ராக், ரிக்கி புர்செல் மற்றும் ஏடிஜி என உலகின் ஆகச்சிறந்த கலைஞர்களுடன் இணைந்து அமைதியின், சர்வதேச ஒற்றுமையின் குரலாக ஒலிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன். இதுபோன்ற கலை வடிவங்கள் மூலம் அமைதி, அன்பு மற்றும் ஒருமைப்பாட்டை விதைப்பதில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என உறுதியாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.