தற்போது தமிழ்ச்சினிமாவில் தடதடக்கிற பிரச்னை 100 சத வீதமா ,அல்லது 50 சத வீத இருக்கை அனுமதியா என்பதுதான்.!
தமிழக அரசின் கையைப்பிடித்து கெஞ்சி ,கூத்தாடி வாங்கிய 100 சதவீத இருக்கை அனுமதியை சம்மட்டி கொண்டு நொறுக்குவதைப்போல மத்திய அரசு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறது.
விஜய் ரசிகர்களும் ,சிலம்பரசன் ரசிகர்களும் சந்தோஷமுடன் பொங்கல் திருநாளை கொண்டாடலாம் என்கிற மகிழ்ச்சியில் இருந்தார்கள்.
மாஸ்டர் படத்துடன் சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன் படமும் பொங்கலில் வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டுதலின் படி 100% பார்வையாளர்கள் அனுமதிக்கு மத்திய அரசின் உள்துறை எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்யவும் அறிவுறுத்தியது.
மேலும் 100% பார்வையாளர்கள் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து சில வழக்குகளும் போடப்பட்டுள்ளது. இதனால், மாஸ்டர், ஈஸ்வரன் இரண்டு படக்குழுவினரும் கலக்கம் அடைந்துள்ளனர்..ரசிகர்கள் பெரிதும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த உத்தரவை தமிழக அரசு வாபஸ் பெற்றால் மீண்டும் 50% இருக்கையுடன் தியேட்டர்கள் செயல்படும்.
இதனால் மாஸ்டர், ஈஸ்வரன் இரண்டு படத்துக்குமே சரியான வசூல் கிடைக்காது. எனவே மிகபெரும் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட மாஸ்டர் படத்தினை முதலில் வெளியிட்ட பின்னர், 3 வாரங்கள் கழித்து ஈஸ்வரன் படத்தினை வெளியிடலாம் என்றும் ஈஸ்வரன் படம் வெளியாகும் போது மற்றப்படங்களை வெளியிடாமல் இருக்கவும் திரையரங்க உரிமையாளர்கள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு சிலம்பரசனும் ஈஸ்வரன் படக்குழுவினரும் உடன்படுவார்களா?