
எழுத்து இயக்கம் : எம் .எஸ்.ஆனந்தன் ,
விஷால் ,ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,ரெஜினா காசன்ட்ரா, விஜயபாபு ,கே.ஆர்.விஜயா, ரோபோ சங்கர் , மனோபாலா,
இசை : யுவன்சங்கர்ராஜா, ஒளிப்பதிவு : பாலசுப்பிரமணியம்,
முதல் காட்சியிலேயே மோடி மாதிரியான தோற்றத்தில் உள்ள ஒருவருக்கு செம அடி விழ தியேட்டரில் அப்படி ஒரு சந்தோசம். முதல் அடியே அவருக்குத்தானா என்கிற எண்ணத்துடன் சிரிக்கிறார்கள்.!
தொடர்ச்சியாக ஒரு போலீஸ் அதிகாரி அடிக்கிற கமெண்ட்ஸ் செம கிளாப்ஸ் .அள்ளுகிறது.
“ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் “என்று சொன்ன முதல் அமைச்சரை மனதில் வைத்து எழுதிய வசனம் போலும். அடடா ஆரம்பமே அமர்க்களமா இருக்கே , என்கிற மகிழ்ச்சி ஏற்படுகிறது. சுதந்திரத்தினத்தன்று 50 இடங்களில் துப்பாக்கி முனையில் கொள்ளை என்கிற சம்பவமும் அது தொடர்பான வசனங்களும் நம் எதிர்பார்ப்பினை அதிகமாக்குகிறது.
ஆனால் அந்த எதிர்பார்ப்பு?
போலீஸ் கமிஷனராக வருகிற விஜயபாபு மாதிரி ஆகி விடுகிறது. தலை மட்டும் பெரிதாக இருக்கிறது. கம்பீரம் இல்லை.யூனிபார்ம் பிட்டாகவே இல்லை. காய்ச்சலில் விழுந்தவர் மாதிரியான ஒருவரை யூனிபார்முக்குள் எப்படி நுழைத்தார்கள் என்பது தெரியவில்லை.
விஷால் ராணுவத்தில் அதிகாரியாக இருக்கிறவர். இவருடைய அப்பா “அசோகா சக்ரா” விருது வாங்கிய ராணுவ அதிகாரி. வீர மரணம் அடைத்த அவரின் படத்துக்கு அணிவித்திருந்த அசோகா சக்ரா விருதை கொள்ளையடித்து விடுகிறார்கள். ஆக டைட்டிலுக்கு நியாயம் கற்பித்தாகிவிட்டது. 50 இடங்களில் கொள்ளையடித்த கொள்ளையர்களை கண்டு பிடிப்பதற்காக விஷாலும் உதவி கமிஷனர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் சேர்ந்து கண்டு பிடிக்க முயற்சிக்கிறார்கள்.
ஆக அவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ,பாடுபட்டு ,துப்பு துலக்கி கண்டு பிடித்தார்கள் என்பதுதான் மீதி கதை.!
எழுத்து இயக்கம் ஆனந்தனுக்கு முதல் முயற்சி.
படத்தின் பெரும்பகுதி சாதாரண மக்களுக்கு இன்னும் புரியாமல் இருக்கிற ஹாக்கிங் பற்றியதாகவே இருக்கிறது. அதை வைத்துதான் கொள்ளை அடிக்கப்படுகிறது என்பதுதான் கதாசிரியரின் கற்பனை .பத்து பதினைந்து மானிட்டர்கள் ,வாக்கி டாக்கி ,புளுடூத் என ஹைடெக்காக கொண்டு போகும் முயற்சியில் இயக்குனரால் வெற்றி பெற முடியவில்லை என்பதுதான் உண்மை.!
இரும்புத்திரை பார்ட் 2 என்று சொல்லுமளவுக்கு கதை போனாலும் விஷாலின் ஆக்சனால் கதை முதுகு எலும்பு முறியாமல் காப்பாற்றப்படுகிறது. விஷாலின் சண்டைக்காட்சிகள் மிகப்பெரிய பலம். ராணுவ அதிகாரியான அவருக்கு மொத்த போலீசும் அடி பணிந்து நடப்பது உதவி கமிஷனர் ஷ்ரத்தாவினால்தான் என்பதை நம்பமுடியவில்லை. இதைப்போன்ற லாஜிக் தடுமாற்றங்கள் அங்கங்கே இருக்கின்றன,
வில்லியாக என்ட்ரி கொடுத்திருக்கிறார் ரெஜினா கசென்ரா .வித்தியாசம் காட்ட முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். சிரிப்புக்காக சேர்க்கப்பட்ட ரோபோ சங்கரால் ஆடியன்ஸை திருப்திப்படுத்தமுடியவில்லை. ஒரு சீனில் கூட சிரிக்க முடியவில்லை என்பது சோகம்தான்!
இசை யுவன் சங்கர்ராஜாவா ?
ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியம் ஓரளவு படத்தை காப்பாற்றி இருக்கிறார்.
மிகவும் ஹைடெக்காக எடுக்க முயன்று முடியாமல் போயிருக்கிறது சக்ரா. ஆனால் நல்ல முயற்சி.












