“ஓர் உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்.ஆனால், உயிரிலும் உன்னதமானது
எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கவுரவம்”என்பார் தமிழினத்தலைவர் வேலு பிரபாகரன்.
“போருக்கு செல்கிறபோது நீ ஆயுதத்தை கொண்டு செ ல்லவேண்டியதில்லை. நீ உண்மையான வீரன் என்றால் போர்க்களத்திலேயே உன்னுடைய ஆயுதத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும் “என்கிறார் புரட்சி வீரன் சே குவேரா .
“அடிமை ஒரேயடியாக விற்பனை செய்யப்பட்டுவிடுகிறான்; பாட்டாளியோ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் தன்னை விற்றுக் கொள்ள வேண்டும்.”என்கிறது கம்யூனிசம்.
‘‘சுரண்டப்படும் உழைப்பின் உபரி மதிப்பு மூலதனமாக எந்த அளவுக்குக் குவிகிறதோ, அந்த அளவுக்குத் தொழிலாளர்களின் ஊதியம் குறையும் – வேலையின்மையும் அதிகரிக்கும்” என்றார் மார்க்ஸ்
இந்த நான்கின் கலவையே ‘சங்கத்தலைவன்.’
முன்னர் வெளியான சங்கத்தமிழன் வேறு. இன்றைய சங்கத்தலைவன் வேறு. பெயரைப்பார்த்து விட்டு சங்க காலத்துத் தலைவனை பற்றிய கதையோ என்று தீர்மானித்து விடாதீர்கள்.
செந்நெறி பரப்பும் கம்யூனிசத்தின் தொழிற் சங்கத்தின் தலைவனைப் பற்றிய திரைப்படம்.
முழுக்க முழுக்க வர்க்க பேதத்தையே படம் சொன்னாலும் இயல்பான காதல் என்பதில் இதுவும் ஒன்று.அதை தவிர்க்க முடியாது என்பதை சுட்டுகிறது சங்கத்தலைவன் திரைப்படம்.
கருணாஸ் -சுனு லட்சுமிதான் அந்த காதல் கிளிகள்.
சங்கத்தலைவராக சமுத்திரக்கனி ,இவருக்கு சிவப்பும் கருப்பும் எப்போதும் பொருந்திப் போகிறது. தண்ணீர் மாதிரி.! எல்லாவித சாதனத்திலும் அடங்கிவிடும்
இவருக்கும் விஜய்சேதுபதியும் அப்படி ஒரு முக,குரல் ராசி.!
அப்பாவியான விசைத்தறி தொழிலாளியான கருணாஸ் எப்படி சங்கத்தின் தலைவராக உருவாக்கப்படுகிறார், முதலாளியான மாரிமுத்துவும் ,கருணாசும் எதற்காக கொல்லப் படுகிறார்கள் என்பதை மூலக்கதை ஆசிரியர் பாரதிநாதனின் கருத்துக்களுக்கு முரண்பாடு இல்லாமல் கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் மணிமாறன் .
ஆனால் அந்த கிளைமாக்கஸ் அவசியம்தானா என்பது இன்றைய தலைமுறையின் கேள்வி! அவர்களுக்கு உறுத்தலாகத் தெரிவதில் வியப்பில்லை.
பெண்கள் இல்லாமல் எந்த போராட்டமும் வெற்றி பெறாது என்கிற கம்யூனிசக்கொள்கை சரியான இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
படத்தின் நாயகன் சமுத்திரக்கனியா ,அல்லது கருணாஸ் ,மாரிமுத்துவா என்கிற அளவுக்கு பின்னவர்கள் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள்.
கருணாஸின் பவ்யம்,பயம்,இயலாமை எப்படி படிப்படியாக குறைந்து குரல் உயர்த்தி சங்கத்தலைவனாக மாற முடிந்தது என்பதை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அடப்பாவி,இவ்வளவு திறமையை வைத்துக்கொண்டு எப்படி உன்னால் காமடி என்கிற தனி வளையில் இருக்கமுடிகிறது.?
மாரிமுத்து. இயக்குநர் என்பதால் எந்த கேரக்டர்க்குள்ளும் ஒன்றிக்கொள்ளமுடிகிறது .வித்தியாசமான கேரக்டர்கள் என்றால் இனி மாரிமுத்துவை கூப்பிடுவார்கள்.சிறப்பு.வெகு சிறப்பு.
சுனு லட்சுமியின் நடிப்பு சும்மா சொல்லக்கூடாது. கேஸ்டிங் டைரக்டரை பாராட்ட வேண்டும். அதேபோல ரம்யா சுப்பிரமணியனையும் வாழ்த்தியாக வேண்டும் .சமுத்திரக்கனியின் மனைவியாக மட்டுமில்லாமல் இரண்டு குழந்தைகளின் அம்மாவாகவும் நடித்திருக்கிறார்.
படம் சிறப்பு. கார்ப்பரேட்டுகளின் கைகளில் நாடு சிக்கிக்கொண்டிருக்கிற நிலையில் இத்தகைய படங்கள் அவசியமாகின்றன.