
கவிப் பேரரசு வைரமுத்து எழுதிய தாய் மொழி வாழ்த்து.
நாட்படு தேறலுக்காக உலகத் தமிழர்கள் நிலம் கடந்து பாடும் பொதுவான தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒரு பாடல் புனைந்திருக்கிறேன்.
உலகத் தமிழர்களுக்கு இது என் காணிக்கை…
*
எழுத்தும் நீயே சொல்லும் நீயே பொருளும் நீயே பொற்றமிழ்த் தாயே
அகமும் நீயே புறமும் நீயே முகமும் நீயே முத்தமிழ்த் தாயே
உனக்கு வணக்கம் தாயே – எம்மை உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!
*
ஆயிரமாயிரம் ஆண்டுகள் எங்கள் ஆன்ற புலவோர் எழுத்தில் இருந்தாய் உழுதும் விதைத்தும் உலகைச் சமைத்த உழைக்கும் மக்கள் சொல்லில் இருந்தாய்
ஆழி அலையிலும் ஆயுத மழையிலும் அழிந்துபடாத பொருளாய் இருந்தாய் நிலவும் கதிரும் நிலவும் வரையில் நீயே தமிழே எங்கள் முதல்தாய்
உனக்கு வணக்கம் தாயே – எம்மை உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!
*
காலக் கடலில் கரைந்த நாட்களை ஓலைச் சுவடியில் ஓதி முடித்தாய் காதல் வீரம் ஞானம் மானம் கவியில் கலையில் கட்டி வளர்த்தாய்
அகிலத்துக்கே தமிழர் சேதி அறமே அறமே என்று திளைத்தாய் எத்துணை தலைமுறை மாறிய போதும் எம்துணை யாக என்றும் நிலைத்தாய்
உனக்கு வணக்கம் தாயே – எம்மை உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!












