பொங்கியிருக்கிறார் ,போர் முழக்கம் செய்திருக்கிறார்,தொடை தட்டி கோதாவில் இறங்கியிருக்கிறார் ..இப்படி என்ன வேணும்னாலும் சொல்லலாம்.!
நடிகர் பிரகாஷ் ராஜ் கொதித்துப்போய் இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.!
பன்முக நடிகர் பிரகாஷ் ராஜ் .தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் நடித்திருந்தாலும் இவரை தமிழுக்கு கொண்டுவந்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் .
ஆந்திராவின் மூவி ஆர்ட்டிஸ்ட்ஸ் அசோசியேசன் ( மா ) தலைவர் பதவிக்கு நிற்கப்போவதாக அறிவித்து தனது அணியினராக 26 பேரை அறிவித்திருக்கிறார். இந்த அணியினரை ‘சுயமரியாதை’ அணி என்பதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். சங்கத்தில் சுயமரியாதை தேவை என்பதை வலியுறுத்தியே இந்த அணி போட்டியிடுகிறது.!!
இந்த அறிவிப்புக்குப்பிறகு ஜீவிதா ராஜசேகர் ,விஷ்ணு மஞ்சு ஆகியோரும் தலைவர் பதவிக்கு நிற்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இதன் பின்னர்தான் விவகாரமே வந்திருக்கிறது.
“பிரகாஷ் ராஜ் யார்.? அவர் ஆந்திரர் அல்லர் . கன்னடர் .அவருக்கு இங்கு என்ன வேலை?தாய் மொழி கன்னடம்.அவர் போட்டியிடலாமா?” என சரமாரியாக எதிரணியினர் கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு பிரகாஷ் ராஜ் சொன்ன பதில்: “தெலுங்கு பேசும் விஷால் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியும் என்கிறபோது நான் ஏன் இங்கு போட்டியிடக்கூடாது?”
நச்சுன்னு இருக்குல்ல ?
“தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக விஷால் தேர்வு செய்யப்பட்ட முன்னுதாரணத்தை சுட்டி காட்டியிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.
பிரகாஷ் ராஜின் இதர நியாயமான கேள்விகள் இனி.!
“தெலங்கானா மாநிலத்தில் நான் ஒரு கிராமத்தை தத்து எடுத்தபோது ஒரு பயலாவது நான் வேற்று மாநிலத்தவன் என்று சொன்னானா?”
“என்னுடைய உதவியாளர்களுக்காக நான் ஹைதராபாத்தில் வீடுகள் வாங்கியபோது நான் யார் என்பது தெரியவில்லையா?”
“என்னுடைய மகன் ஹைதராபாத் பள்ளியில்தான் படிக்கிறான் ,என்னுடைய ஆதார் முகவரியே நான் உள்ளூர்தான் என்பதை சொல்லுமே!”
“அந்தப்புரம் தெலுங்குதானே எனக்கு தேசிய விருது வாங்கித்தந்தது. தெலுங்கு படங்களில் நடித்துத்தானே 9 நந்தி விருதுகளை வாங்கினேன்.”
” நான் உள்ளூர்க்காரனா ,இல்லையா என்பதல்ல பிரச்னை ,குறுகிய மனப்பான்மையும் ,உங்களின் குறுக்குப்புத்தியும்தான் காரணம்.”என விளாசியிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.
30 ஆண்டுகாலமாக இந்த இண்டஸ்ட்ரியில் இருக்கிறேன்.பெயர் ,புகழ் ,பணம் ,எல்லாமே இந்த இண்டஸ்ட்ரிதான் தந்தது. இதற்காக நான் ஏதாவது செய்தாக வேண்டாமா?அதனால்தான் தலைவராக போட்டியிடுகிறேன்.”என்கிறார் பிரகாஷ் ராஜ்.
இவரது அணியில் ஜெயசுதா ,ஸ்ரீகாந்த் ,பானர்ஜி ,சாய் குமார் ,தனிஷ் ,பிரகதி ,அனுசுயா ,சனா ,அனிதா சவுத்ரி ,சுதா,அஜய் ,நாகிநீது,பிரம்மாஜி ,ரவி பிரகாஷ் ,சமீர்,உத்தேஜ் ,பண்டலா கணேஷ் ,ஏடித ஸ்ரீராம் , சிவா ரெட்டி ,பூபால் ,டார்ஜான் ,சுரேஷ் ,கய்யும் ,சுதீர் ,கோவிந்தராவ் ,ஸ்ரீதர் ராவ் ,ஆகியோராவர்.