
முதல் நாள் இருந்த பரபரப்பும் ,பதட்டமும் மறுநாள் முடிவு தெரிந்த பின்னர் முற்றிலுமாக இல்லாமல் கரைந்து போனது.
தலைவர் அழைத்திருக்கிறார்.அமெரிக்கா சென்று உடல்நிலையை சோதித்துத் தெரிந்த பின்னர் அழைத்திருக்கிறார் என்றால் “அது அரசியலுக்கு வருவதற்கான அறிகுறி” என அவரது ரசிகர்கள் நம்பியிருந்தனர்.
ஆனால் திட்டவட்டமாக ,”அரசியலே கிடையாது.”என்பதை ஆணித்தரமாக சொல்லி மக்கள் மன்றங்களையும் கலைத்துவிட்டேன்”என்று குறு அறிக்கையை அளித்தபிறகு நொறுங்கிப்போனார்கள் ரசிகர்கள்.
ரசிகர்களாக இருந்த தங்களை ‘அரசியல் காவலர்கள்” என மாற்றிய தலைவர் மீண்டும் ரசிகர்களாக மாறச் சொல்கிறாரே என வருந்துகிறார்கள். பள்ளி இறுதித் தேர்வு எழுத வேண்டிய மாணவனை எல்.கே.ஜி அளவுக்கு தாழ்த்தினால் தாங்குவானா ரசிகன்?
நாளை ரசிகர் மன்றங்களும் கலைக்கப்படலாம். திரைஉலகினை விட்டு ரஜினி ஒய்வு பெறுகிறபோது அதுதான் நிகழும்.!
வெற்றிகரமான ஒரு நடிகர் அரசியலில் தோல்வியுறுவது புதிதல்ல.!
ஆந்திரத்தில் சிரஞ்சீவி ,பவன் கல்யாண் ,இவர்களால் அரசியலில் தலை தூக்க முடியவில்லை. மக்கள் ஆதரவு திரைப்படங்களுக்கு இருந்த அளவுக்கு அரசியலுக்கு ஆதரவு இல்லாது போயிற்று.
தமிழகத்திலும் அத்தகைய நடிகர்கள் இருக்கிறார்கள்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் ,ஜெயலலிதா ,என்டி .ராமராவ் ,ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் மட்டும் வெற்றி பெறுவது எதனால்?சொந்தமாக கட்சி தொடங்கி இவர்களால் மட்டும் எப்படி வெற்றி பெற முடிந்தது?
கண்களுக்கு தெரியாத போராட்ட குணத்தினால் கடுமையான விளைவுகளை உடைத்தெறிந்த துணிச்சல் அவர்களுக்கு இருந்தது. தேசிய அளவில் பேசு பொருளானார்கள்.
இவர்களது எதிரிகளில் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது முக்கிய காரணம்.
ரஜினிகாந்த் தேசிய அளவில் நடிகராக மட்டுமே தெரிந்தார்.குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளராக இருந்ததினால் தேசிய அளவில் வெறுப்பும் இருந்தது. மம்தா பானர்ஜி ,பினராயி விஜயன் ,ராகுல் காந்தி போன்ற பிற கட்சி தலைவர்களுக்கு ரஜினியின் சினிமா மாஸ் மட்டுமே தெரிந்தது.
தமிழகத்தில் முன்னணி நடிகராகவே ரஜினி கருதப்பட்டார். அவரது ஸ்டைல் ஒரு காலத்தில் பேசப்பட்டது. ஆனால் அந்த ஸ்டைல் காமெடியாக மாறிவிட்டது.!!
அவரால் அரசியலில் பிரகாசிக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்த காரணத்தினால் மட்டும் இல்லாமல் ,தன்னுடைய உடல் நலம் பாதிக்கக்கூடாது என்கிற எண்ணத்தினாலும் அவரால் அரசியலுக்கு வரமுடியவில்லை. சட்டென உணர்ச்சி வயப்படுகிறவர்கள் அரசியலில் நல்ல நிலையான முடிவினை எடுக்க இயலாது.
போராடுகிற குணம் அவருக்கில்லாமல் போய்விட்டது. எடுப்பார் கைப்பிள்ளையாகி விட்டார்.அவர் அரசியலுக்கு வராதது அவருக்கு நல்லதுதான்.!












