
பிரபல தமிழ் நடிகர் விஜய். அடுத்து அரசியலுக்கு வருவதாக பேசப்படுகிறவர்.
இவர் இங்கிலாந்தில் இருந்து சில கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை 2012 ஆம் ஆண்டு இறக்குமதி செய்திருந்தார் .இந்த காருக்கு நடிகர் விஜய் நுழைவு வரி கட்டவில்லை இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய முடியவில்லை. எனவே ஆடம்பர சொகுசுக்காருக்கான நுழைவு வரியை கட்டும்படி வணிகவரி துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
துணை ஆணையர் விதித்திருந்த உத்தரவை ரத்து செய்யும்படி விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இறக்குமதி செய்யப்பட காருக்கு வரி விதிக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதை இன்று விசாரித்த நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு , ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது..தன்னுடைய கருத்தையும் கடுமையுடன் பதிவு செய்திருக்கிறது. அபராதத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கவும் அறிவுறுத்தியது
நடிகர் விஜய் யின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, சமூக நீதிக்கு பாடுபடுவதாக திரையில் பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் இந்தப் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கண்டித்தார்.
நடிகர்கள் உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும்.ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது என்று கூறிய நீதிமன்றம்,.வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு எனவும் தெரிவித்தது.
சொகுசுக் காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் அதற்கு வரி கட்ட வேண்டும் என்று தெரியாமலா நடிகர் விஜய் கார் வாங்கினார் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இதுபோன்ற சிறப்பு கோரிக்கைகளை கோருவதற்கு முன் பிரபலங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மனுதாரர் என்ன தொழில் செய்கிறார் என்று நீதிபதி கேட்டதற்கு விஜய்யின் வக்கீல் நடிகர் என சொன்னார்.
மக்கள் செலுத்தக்கூடிய வரி தான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் நீதிபதி விளக்கமாக தெரிவித்தார், பிறகு நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டார்.












