புலவர் புலமைப்பித்தன் வயது (85)’கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 9.33 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக நீலாங்கரை வெட்டுவாங்கேணி யில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் திரையுலகினர் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புலவர்புலமைப்பித்தன் கடந்த 1935-ம் ஆண்டு கோவையில் பிறந்தார். அவரது இயற்பெயர் ராமசாமி. தமிழ் மீது உள்ள ஆர்வத்தாலும், திராவிட கொள்கைகளில் மீதுள்ள பற்றாலும் தனது பெயரை புலமைப்பித்தன் என்று மாற்றிக்கொண்டார். அவர் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்த போது , இயக்குநர் கே. சங்கர் குடியிருந்த கோயில் படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பளித்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற நான் யார்? நான் யார்? நீ யார்?நாலும் தெரிந்தவர் யார்– யார்?என்ற பாடலை எழுதினார் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பராக திகழ்ந்த புலமைப்பித்தன் ,ஊருக்கு உழைப்பவன் படத்தில்,’அழகென்னும் ஓவியம் இங்கே’,அடிமைப் பெண் படத்தில்,’ஆயிரம் நிலவே வா’ இதயக்கனி படத்தில்,’நீங்க நல்லா இருக்கணும்’ நல்ல நேரம் படத்தில் ‘ஓடிஓடி உழைக்கணும்’ பல்லாண்டு வாழ்க படத்தில், ‘இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா’ உள்பட பல பாடல்கள் இன்றும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வருகிறது.
தமிழில் 200 திரைப் படங்களுக்கு மேல் அவர் பாடல் எழுதியுள்ளார். ஏராளமான விருதுகளையும் அவர் பெற்றுள்ளனர்.அவர் கடைசியாக 2015-ம் ஆண்டு வடிவேலு நடித்த எலி படத்துக்கு பாடல்கள் எழுதினார். திரையுலகில் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி,கமல்,விஜயகாந்த் பாக்யராஜ் உள்பட பலருக்கும் பாடல்கள் எழுதியிருந்தாலும் எம்ஜிஆருக்காக இவர் எழுதிய பாடல்கள்அதிகம்.












