நடிகை சமந்தா தன் திருமணம் குறித்து ஐதரா பாத்தில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது,
‘‘எனக்கு ரசிகர்களின் அன்பு, ஆதரவால் படங்கள் குவிகிறது. ஓய்வு இல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். கோடையில் கூட எனக்கு விடுமுறை இல்லை.
ஒரு படத்தை முடித்ததும் அடுத்த பட வேலைகளை தொடங்கி விடுகிறார்கள். எனது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த தெறி, 24, பிரம்மோற்சவம் ஆகிய படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தன.
காதல் கதைகளில் நடித்து எனக்கு அலுத்து விட்டது. ரசிகர்களும் அது போன்ற படங்களில் தொடர்ந்து நடிப்பதை விரும்ப மாட்டார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வித்தியாசமான கதையம்சம் உள்ள திகில் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அது மாதிரியான கதைகளை தேடுகிறேன்.
கன்னடத்தில் கதாநாயகன் இல்லாத கதையம்சம் உள்ள படமொன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை உடனே ஒப்புக் கொண்டேன். ஐதராபாத்துக்கு படப்பிடிப்புக்கு வரும்போதெல்லாம் ஓட்டல்களில் தங்குகிறேன். தற்போது இங்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க திட்டமிட்டு நல்ல வீடு தேடி வருகிறேன்.
சமூக சேவை பணிகள் எனது உயிர் மூச்சு மாதிரி. ஆத்ம திருப்திக்காக சமூக சேவைகளில் ஈடுபடுகிறேன். விரைவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி சமூக சேவை பணிகளுக்கு நிதி திரட்ட இருக்கிறேன்.
நான் ஒருவரை காதலிக்கிறேன் என்றும் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறி இருந்தேன். இதனால் மாப்பிள்ளை யார் என்று என்னிடம் கேள்வி கேட்டு நச்சரித்து விட்டார்கள். இணையதளங்களிலும் எனது திருமணம் பற்றிய செய்திகளே பரவி கிடந்தன. உடனடியாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன். திருமணத்துக்கு தயாரானதும் மாப்பிள்ளை யார் என்ற விவரத்தை தெரிவிப்பேன்.’’
இவ்வாறு சமந்தா கூறினார்.