நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டில் இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் இசையமைப்பாளர் தேவா.வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், இயக்குநர் அமீர், இயக்குநர் இரா. சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார், நடிகர் கருணாஸ் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் பேசுகையில்,” ’இங்கு மேடையில் இயக்குநர் சரவணன் பேசும்போது,‘ தமிழ் சினிமாவின் பொற்காலம் இது’ என தவறான தகவலை சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பது, இயக்குநர் பாரதிராஜா படம் இயக்கிய காலம்…நாங்கள் நடித்த காலம்.. என அதனைத்தான் குறிப்பிடவேண்டும். தற்போது எல்லாம் மாறிவிட்டது. தமிழ் சினிமா எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என குறிப்பிட வேண்டுமென்றால், இன்று தமிழகத்தில் வேற்று மொழி படங்கள் தான் அதிக வசூலை குவிக்கிறது. சமீபத்தில் வெளியான அஜித் படம் மற்றும் விஜய் படம் ஆகிய இரண்டும் படத்திற்காக செலவழிக்கவில்லை. தங்களுக்காக செலவழித்து கொண்டனர். தயாரிப்பு செலவின் 90 சதவீதத்தை ஊதியமாக கேட்டால் எப்படி? படத்தை உருவாக்க இயலும். இந்த மேடையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, ‘இந்தப் போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன்’. நாங்கள் படம் எடுக்கும் பொழுது 10% தான் சம்பளம், மீதி 90% படத் தயாரிப்பிற்காக இருக்கும். அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமா கதைகள் பட உருவாக்கத்தால் வென்றது”என்றார் .
. மேலும் ‘ஆதார் ’படத்தில் கருணாஸ் சம்பளம் வாங்கவில்லை. படத்தின் தயாரிப்பாளரை நாங்கள் யாரும் சந்திக்கவே இல்லை. இங்குதான் சந்திக்கிறோம். தமிழ் சினிமா ஒரு மோசமான திரை உலகம். இருப்பினும் இந்த சினிமா மீது நம்பிக்கை வைத்து, புதிய தயாரிப்பாளர் ஒருவர் வந்திருக்கிறார் என்றால், அவரை மனதார பாராட்டுகிறேன். இந்தப் படத்திற்கு நாங்கள் உண்மையாக உழைத்திருக்கிறோம். அதனால் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும்” என்றார்.
இயக்குநர் அமீர் பேசுகையில், ‘நடிகர் அருண் பாண்டியனின் பேச்சை மறுத்துப்பேசினார்.’
“அருண்பாண்டியன் பேசும்போது நிறைய புள்ளி விவரங்களை சொல்லிவிட்டு, தமிழ் சினிமா தற்போது பின் தங்கி இருக்கிறது என குறிப்பிட்டார். தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு படத்தின் பட்ஜெட்டில் 90% அல்லது 80% சம்பளமாக தருகிறார்கள். தர வேண்டியிருக்கிறது என சொன்னார். ஏன் கொடுக்கிறார்கள் என்பதை நான் கேட்கவில்லை. ஆனால் அவர் பேசும்போது ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். அதை தவறுதலாகத் தான் பயன்படுத்தியிருப்பார் என நினைக்கிறேன். ‘தமிழ் சினிமா எல்லா வகையிலும் பின் தங்கி இருக்கிறது’ என சொன்னார். இதை நான் ஏற்க மறுக்கிறேன். இந்தியாவிற்கே புதிய பாணியிலான சினிமாவைக் கற்றுக் கொடுத்தது தமிழ் சினிமா. ஒருநாளும் தமிழ் சினிமா பின் தங்காது. ‘ஆர் ஆர் ஆர்’, ‘கே ஜி எஃப்’ போன்ற படங்களை வைத்து தமிழ் சினிமாவை எடை போடாதீர்கள். ஏனென்றால் நாங்கள் அந்த காலத்திலேயே ‘சந்திரலேகா’ என்ற பிரமாண்டமான படைப்பை உருவாக்கி இருக்கிறோம். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘நாடோடி மன்னன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற படைப்புகளுக்கு நிகராக இதுவரை வேறு எந்த மொழிப் படங்களும் உருவாகவில்லை. சமூக படைப்புகளுக்கு இணையாகவோ எளிமையான படைப்புகளுக்கோ ஈடு இணை இல்லை. அதனால் தமிழ் சினிமா எப்போதும் இந்திய சினிமாவிற்கு முன்னோடி தான். ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப வணிக சினிமாவாக மாறும்போது மாற்றங்கள் ஏற்படும். ‘16 வயதினிலே’, ‘கிழக்கு சீமையிலே’ போன்ற படங்கள் வெளியான போதும், வணிக சினிமா இருந்திருக்கிறது. ஆனால் அவை ஒருபோதும் இவை வெளியாவதற்கு தடையாக இருந்ததில்லை என்பதை முக்கியமாக பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவில் பணியாற்றிய கலைஞர்கள் தான் இன்று வேற்று மொழிப்படங்களில் பணியாற்றுகிறார்கள். இயக்குநர் ராஜமவுலி அவர்களே ஆர் ஆர் ஆர் படத்தின் விளம்பர நிகழ்வில்,“ தமிழ்சினிமா எங்களது தாய்வீடு என்று சொல்லியிருக்கிறார்.. இங்கு கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்றும், எங்களுக்கு தமிழ்சினிமா பிரமிப்பை தருகிறது.” என்றும் சொன்னார். அதனால் தமிழ் சினிமாவில் முன்னேற்றத்திற்கு கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்கள் என்றைக்கும் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.”என்றார்.
நடிகர் கருணாஸ் பேசுகையில்,” முதலில் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி. ஏனெனில் நான்தான் பினாமி பெயரில் இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என தகவல்கள் பரவியிருக்கிறது. கூவம் என்றால் நாறும். அதிலும் கூவத்தூர் சம்பவத்திற்குப் பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் தவறு. அதே தருணத்தில் இவர்களை திருத்துவது என் வேலை அல்ல. அதற்கான கால நேரமும் எனக்கு இல்லை.”என்றார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசுகையில்,” பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளுக்கு கலந்து கொள்ள விரும்புவதில்லை ஆனால் தற்போது இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் ஏனெனில் கலைஞர்களை இங்கு தான் சந்திக்க முடிகிறது. இது போன்ற நிகழ்வுகளில் கலைஞர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் அதிலும் சினிமாக்காரன் ஆகவே பிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. படத்தின் முன்னோட்டத்தை பார்த்தேன் அதில் கருணாஸ் கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீதிகளில் நடக்கும்போது என் கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் எட்டிப்பார்த்தது. கதை என்ன என்று முழுதாக தெரியாதிருந்தாலும் முன்னோட்டத்தை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது.
சினிமா கம்பெனிகளில் நமக்கு கிடைக்கும் பேரும் புகழும் வேறு எங்கும் கிடைப்பதில்லை. சினிமா தொழில் தான் நல்ல தொழில்.. ஒரு தயாரிப்பின் மதிப்பு 100 ரூபாய். 70 ரூபாய் செலவில் அந்த தயாரிப்பு உருவாகிறது என்ற கவலை அவருக்கு அருண் பாண்டியனுக்கு ஏனென்றால் அவன் தயாரிப்பாளராகவும் இருந்தவர். நடிகர்கள் சம்பளம் வாங்குவது தவறென்று சொல்லவில்லை ஆனால் ஒரு பட தயாரிப்பின் உங்களுடைய பங்கு எவ்வளவு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் அண்மைக்காலமாக பிரமாண்டமாக செலவழித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். அந்த வகையில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் தற்போதைய சூழலில் தமிழ் மலையாள சினிமாக்களை விட தெலுங்கு சினிமா ஒருபடி உயர்வாகவே இருக்கிறது. ” என்றார்.