சுயமாகவே கரு கொண்டு ,தானாகவே பிரசவிக்கும் ஜந்துவே வதந்தி. இதற்கு தாயும் இல்லை ,தந்தையும் இல்லை.அவனவன் மனப்பான்மைக்கு தகுந்த மாதிரி பிறந்து தொலைக்கும்.!
அண்மையில் ஒரு வதந்தி.
“நாசர் திரை உலகினை விட்டு விலகப்போகிறார் ” என்பதாக.!
எவனின் கற்பனையில் ஜனித்ததோ ..தெரியாது.
இதற்கு நாசர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
“நான் நடிகனாகத் தான் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட பின், அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையாகப் பயிற்சி பெற்றுதான் சினிமாவிற்கு வந்தேன்.
மேலும், வலைத்தளங்களில் சமீபமாக வலம் வந்து கொண்டிருக்கும் என் தொழிலிலிருந்து ஓய்வு என்ற செய்தி என்னால் சொல்லப்பட்டது அல்ல; புனைவு. நான் நடித்துக் கொண்டிருப்பேன்; நடிப்பேன்.
அடையாளம் இல்லாதவர்கள் வலைத்தளங்களில் பதிவிடுவதை விட மக்களால் நம்பப்படுகின்ற நான் மதிக்கின்ற பொறுமையோடும் நட்போடும் பழகுகின்ற ஊடகங்களே அதை வெளியிடுவதுதான் வருத்தமளிக்கிறது.
எளிதாக தொடர்பு கொள்ளும் விதத்தில்தான் நான் பழகியிருக்கிறேன். சொந்த விஷயம் ஆகட்டும் தொழில் சார்ந்த விஷயம் ஆகட்டும், சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் அல்லது விளக்கம் இல்லாது தயவு செய்து தவறான பதிவு செய்ய வேண்டாம்.
என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே தான் இருப்பேன்.”