
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செய்திகளும் ,புனைவுச் செய்திகளும் இரட்டை மாடுகளாகி ‘லியோ’வை இழுத்துச் சென்று இன்று தொழுவம் வந்து இருக்கிறது.
பஞ்சமில்லா கூட்டம். கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விலை பெட்ரோல் விலையாகியது.
“சரி படம் எப்படிய்யா ,அதை சொல்லு.! லோகேஷ் படமா,விஜய் படமா ,யாரோட படம் ?”
சட்டையை பிடிக்காத குறையாக கேட்கிறீர்கள்.
“விஜய்யோட படமில்ல . அவர் சிறப்பாக நடித்திருக்கிற படம். அளவு மீறாமல் ,எல்லை தாண்டாமல் ,சுய விளம்பரம் தேடாமல் நடித்திருக்கிறார். ‘ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் ‘ என்கிற ஆங்கிலப் படத்தின் கதையைத் தழுவி எடுத்திருப்பதாக டைட்டிலில் போட்டு விட்டதால் நெட்டிசன் களுக்கு நொட்டை சொல்ல வழியில்லை. இருந்தாலும் பெத்த அப்பன் தன்னுடைய பிள்ளையை போட்டுத் தள்ளப் பார்ப்பானா, என்கிற லாஜிக்கை முன் வைப்பார்கள்.
கதையை சுருக்கமாக சொல்லுக.!
பார்த்திபன் ( விஜய் .) மனைவி திரிஷா ,மகன் ,மகளுடன் சின்ன ரெஸ்டாரெண்ட் வைத்து நடத்துகிறார் . இமயமலை பகுதியில் ! வன இலாகா அதிகாரி கவுதம் மேனன் விஜய்யின் குடும்ப நண்பர். சிக்கல் இல்லாமல் போய்க் கொண்டிருந்த வாழ்க்கை! கதைக்கு கருவேப்பிலை அளவுக்கு கூட உதவி செய்யாத மிஷ்கின்,சான்டி மாஸ்டர் கும்பல் சும்மா உதார் விட்டு மண்டையைப் போட்டு விடுகிறது.
இதன் பின்னர் அடுத்தடுத்து வந்து ரெஸ்ட்டாரென்டில் வான்டனாக வந்து அலப்பறை கொடுக்கிறார்கள். இடைவேளை முடிந்து திரைக்கு வருகிற சஞ்சய் தத் “நீதானே லியோ ?” என்று கேட்டு கதையை ஓட்ட உதவுகிறார் .
“நான் லியோவா. இல்லை பார்த்திபன்” என்று விஜய் பதறினாலும் ,அர்ஜுனும் சேர்ந்து கொண்டு “நீ லியோ.! எங்க அண்ணன் மகன்”என்று போனஸ் தகவலை பந்தியில் வைக்க விருந்து களை கட்டப் பார்க்கிறது.
எதுக்குடா இவிய்ங்க உறவு சொல்லி விஜய்யை வளைக்கப் பாக்கிறாய்ங்க என்றால் நமக்கு கிடைக்கிற பதில் “போட்டுத்தள்ள !”என்பதுதான் !
ஆனால் அப்பனும் சித்தப்பனும் சேர்ந்து ரத்த உறவான மகனை போட்டுத்தள்ள போதிய காரணம் ஸ்டராங்க் கா இல்லை மி லார்ட் !!!
சரி விஜய் நடிப்பு எப்படி?
சூப்பர்.! “நான் உன் புருஷந்தான்டி ! “என்று நெஞ்சிலிருந்து கனன்று நீதி சொல்லி திரிஷாவின் உதட்டில் லிப் கிஸ் அடிக்கிற இடம், சித்தப்பன் அர்ஜுனுடன் மோதியபடியே வார்த்தைகளால் நைய்ய புடைப்பது தளபதிக்கே புதுசு. நல்ல மாற்றம். விஜய்யின் வழக்கமான விளையாட்டுக்களை தவிர்த்து நடித்திருப்பது வரவேற்கத் தக்கது .
திரிஷா ஒரு தேவதை. அழகாக இருக்கிறார். சஞ்சய் தத் ,அர்ஜூன் இருவரும் படத்திற்கு பலம்.
இயக்குநர் லோகேஷ் ,ஒளிப்பதிவாளர் பரமஹம்சா ,இசை அனிருத் மூவர் கூட்டணிக்கு இந்தப்படம் வெற்றி. உலகநாயகனின் வாய்ஸ் ஓவருடன் கதைக்கு முடிவு கட்டியிருக்கிறார்கள் ,1000 கோடியை எட்டினால் லியோ 2 க்கு வாய்ப்பு உண்டாம்.
வழியில்லை ராஜா.!
–தேவிமணி












