தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 -ம் திகதிகளில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என பலரும் உதவிகளை செய்தனர்.
இந்நிலையில், நடிகர் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளையும், அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்குமாறு மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நிவாரணம் உள்ளிட்ட பொருட்களை மக்கள் இயக்க நிர்வாகிகள் மக்களுக்கு வழங்கினர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள்இன்று வழங்கப்பட்டது .இதற்காக சென்னையில் இருந்து நடிகர் விஜய் இன்று காலை தனி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் சென்றார். . பின்னர் அங்கிருந்து நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கினார்.
.தூத்துக்குடி வெள்ளப்பெருக்கின்போது பாத்திமா நகரை சேர்ந்த ராபின்சிங் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு ஏற்கனவே விஜய் ஆறுதல் தெரிவித்திருந்த நிலையில், ராபின்சிங் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதியை விஜய் வழங்கினார்.மேலும் வீடுகளை இழந்த வள்ளி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், இசக்கி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், சங்கரன் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வீடுகள் சேதம் அடைந்த 30 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை வழங்கினார்.
மேலும் 5 கிலோ அரிசி, சர்க்கரை, ரவை, கோதுமை, சேமியா, உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் வேட்டி, சட்டை, துண்டு ஆகியவற்றை 1,500 பேருக்கு விஜய் வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2,500 பேருக்கு வடை, பாயாசத்துடன் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் வயதான பெண்கள் பலர் விஜய் யின் கன்னத்தை கிள்ளி கொஞ்சியும் முத்தமிட்டும் அவர்க்கு வாழ்த்து தெரிவித்து செல்பியும் எடுத்துக்கொண்டனர்.












