
இன்றைய வாரத்தில் வெளியான படங்களில் பார்க்க வேண்டிய படமாக இருந்தது ‘ப்ளு ஸ்டார்’ .
கவனத்தை முழுமையாக தன்னுடைய வசமாக்கிக் கொண்ட இந்த படத்தில் “அப்படி என்ன இருந்துவிடப் போகுது? இது கிரிக்கெட் பற்றிய விளையாட்டுப்படம் தானே”? ஒரு நமச்சல் இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்த பிறகு “அடடே ,நாட்டுக்கு தேவையான உணர்வை அல்லவா சொல்லி இருக்கிறார்கள்” என்கிற உணர்வு நமக்குள் பதிந்தது.
“பா. ரஞ்சித் தயாரிப்பு .சாதீய பார்வைக்கு சவுக்கடி ,கண்டிப்பாக இருக்கும்.!” தியேட்டரில் அமர்ந்ததும் பக்கத்துச் சீட்டு நம்மை பார்த்த ‘பார்வை’யில் ஓர் அலட்சியம்.
ஆனால் நம்மால் அப்படி கடக்க முடியாது. !மக்களுக்கு நாம் சொல்ல வேண்டிய ஆருடம் இல்லை.
இந்த படத்தில் சேரிக்குப் பதிலாக தனி ‘காலனி’. சற்றே வசதி!! ஐடிஐ மாணவன் அசோக் செல்வன் தலைமையில் விளையாடுகிற கிரிக்கெட் அணிக்கு ‘ப்ளு ஸ்டார் “என்பது பெயர். சாந்தனு தலைமையில் ‘ஆல்பா பாய்ஸ்’ அணி. ஊரு பையன்கள் அணி. தனித் தனியாக இயங்கிய இந்த அணிகள் சில மோதல்களுக்குப் பின்னர் இணைந்து ஓரணியில் நிற்க வேண்டிய கட்டாயம்.!
விளையாட்டை சுற்றி நடக்கிற அரசியல் ,சாதீயம் ,வெறுப்பு, இவைகளை எழுத்தாணி கொண்டு நெஞ்சில் எழுதியிருக்கிற இயக்குநர் ஜெயக்குமார், வலிக்காமல் ,பிரசாரம் பண்ணாமல் சொன்னது தான் சிறப்பு!!! வசனம் மறக்கப்பட வேண்டியவை அல்ல என்பதால் மனதில் உட்காருகிறது .“யாருக்கிட்ட தோத்தோம்னு பாக்கக் கூடாது; ஏன் தோத்தோம்னு பாக்கணும்”, “வெறுப்பு, அழிவுக்கு வழிவகுக்கும், நிதானம் நிறைய சொல்லி தரும்”, “வானத்துக்கு கீழ எல்லோரும் ஒண்ணுக்கொண்ணு சமம்”
மீசையை இழந்த விடலை ,தாடியும் கிடையாது. அண்மைக் கால அட்ராசிட்டி வாலிபனாக இல்லாமல் நடித்திருக்கிறார் அசோக் செல்வன். முன்கோபம்,அவமானத்தினால் சுருங்கிப்போகும் உடல் என அசோக் செல்வன் காதலி கீர்த்தி பாண்டியனிடம் வழிகிற இடம் எனஅமர்க்களப்படுத்தியிருக்கிறார் .
சாந்தனு .. பாக்யராஜின் மகன். இவர் ஏன் முன்னணி நடிகர்களில் ஒருவராக வரவில்லை என்கிற கவலை எனக்கு இருந்தது. வாய்ப்புகள் வரவில்லையே என்கிற வருத்தமும் எனக்குண்டு. இந்த படத்தில் அவைகளுக்கான விடைகள் இருக்கின்றன. அருமை சாந்தனு.! இரு வேறு மனநிலையில் மாட்டிக்கொண்ட சிக்கல், தோல்வி அல்ல என்பதை உணர்ந்த கலக்க நிலை. நாம் நடந்துவந்த பாதை சரியானது இல்லை என உணர்ந்து முடிவு எடுத்து களத்துக்கு வருகிற கேரக்டரில் சாந்தனு அப்லாஸ் அள்ளுகிறார். சாந்தனு சிறந்த நடிகர் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். இயக்குநர்களுக்கான நடிகர் இவர். வாழ்த்துவோமாக!
அல்ட்ரா மாடர்ன் பொண்ணாக போட்டோக்களில் போஸ் கொடுக்கிற கீர்த்தி பாண்டியன் அதிரடியான பெண்ணாக கபடி ஆடிவிட்டு போகிறார். ! இவரது ஏரியா சிறுசு !
பாண்டிய ராஜனின் பையன் பிரித்விராஜனும் நேயர் விருப்பம் மாதிரி.! பின்றே !!
யாரப்பா அந்த புல்லட் பாபு.! ?வசனமும், நடிப்பும் இவர் யார் என்கிற கேள்வி எழுப்புகிறது.!
கிரிக்கெட் காட்சிகள் விருப்புடன் கடப்பதற்கு காரணகர்த்தா இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா. அண்ட் இயக்குநர் .
அம்மா லிஸி ஆண்டனி அவ்வபோது கர்த்தரை இழுக்கும் போதெல்லாம் கொட்டகையில் கர ஒலி !
ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ.அழகன் கதையின் முக்கிய நாயகன் . அரக்கோணத்து பிள்ளைகள் மார் தட்டிக் கொள்வார்கள் ,தங்களை கவுரவப்படுத்திவிட்டார் என்று.!
குறையே இல்லையா ?
மைனாரிட்டியான அந்த சில்லறை குறைகளை சொல்லி சிறுமைப்படுத்த வேண்டாமே!
ப்ளு ஸ்டார் –நீல வண்ணம் உறுத்தவில்லை. உற்சாகம் கொள்கிறது.
–தேவிமணி












