ராதிகா சரத்குமார், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனீஷ்காந்த், இளவரசு , ரைச்சல் ரபேக்கா, வேட்டை முத்துக்குமார் , ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், சிவகுமார் முருகேசன். இசை, நிவாஸ் கே. பிரசன்னா. ஒளிப்பதிவு, விவேக் விஜயகுமார்.
கணவன் இறந்த பிறகு சொத்தை பிரித்து கொடுக்காததால், மகன்கள் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன் ஆகியோர் கைவிட்ட நிலையில், தனது வாழாவெட்டி மகள் ரேச்சலுடன், தனியாக வசித்து வருபவர், ராதிகா சரத்குமார். ஊருக்குள் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வருகிறார். வட்டி வசூல் செய்வதில் கறார் பேர்வழி. இதனால் அவருக்கு ஊருக்குள் பெரிய மரியாதை இல்லை. ஒரு நாள், பக்கவாதம் வந்து, உயிருக்கு போராடியபடி படுத்த படுக்கை ஆகிவிடுகிறார். இதனால், அவரது மகன்கள் உள்ளிட்ட மொத்த ஊரும் சந்தோஷத்தில் மிதக்கிறது. இந்நிலையில், அவரைப் பார்க்க வரும் இளவரசு, ராதிகா சரத்குமாரிடம் சுமார் 160 சவரன் நகைகள் இருப்பதாக கூறுகிறார். அந்த நகைகளை கைப்பற்ற மகன்களும், மருமகனும் போட்டி போடுகிறார்கள். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘தாய் கிழவி’.
ராதிகா சரத்குமார், பவுனுத்தாயி என்ற மூதாட்டி கதாபாத்திரத்தில் வெகு சுலபமாக நடித்திருக்கிறார். அவரது நடிப்புத்திறமைக்கு இந்த கதாபாத்திரம் பெரிய சவாலாக இல்லை என்பதே உண்மை. இவரை, இயக்குநர் இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.
ராதிகாவின் மகன்களாக நடித்திருக்கும் சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன் ஆகியோரில், கமல்ஹாசனின் ரசிகராக சிங்கம்புலி படம் முழுவதும் வலம் வருகிறார். திரைக்கதை ஓட்டத்துக்கும், நகைச்சுவைக்கும் பெரிதும் உதவியிருக்கிறார். மற்றபடி மகளாக நடித்திருக்கும் ரைச்சல் ரபேக்கா, மருமகனாக நடித்திருக்கும் முத்துக்குமார், முனீஷ்காந்த், இளவரசு ஆகியோரும் கவனம் பெறுகிறார்கள்.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே! விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவு கவனம் ஈர்க்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் சிவகுமார் முருகேசன், பவுனுத்தாய் என்ற கதாபாத்தின் மூலம், பெண்கள் சுயமாக யாருடைய துணையையும் எதிர்பாராமல் வாழவேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி, கலகலப்பாகவும், சற்று சிந்திக்கும்படியும் சொல்லியிருக்கிறார். ஒட்டு மொத்த ஊரும் பவுனுத்தாய் சாகவேண்டும். என கடவுளை வேண்டும் அளவிற்கு, கொடுமைக்காரியா? கந்து வட்டி வாங்குபவரா? இப்படி சில முரண்பாடுகளுக்கிடையே, பெண்களுக்கு முன்னேற உபதேசம் செய்யும் அவரது கதாபாத்திரம் முரண்பாடாக வடிவமைக்கப்பட்டுள்ளதை தவிர்த்திருக்கலாம். அதேபோல், குடும்பமாக பார்க்க வேண்டிய படத்தில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள், எதற்கு? எதார்த்தம் என்ற பெயரில் சில இடங்களில் எல்லை மீறல்!
‘தாய் கிழவி’ – பார்க்கலாம்!












