சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்த த.வெ.க மகளிர் தின விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “தனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசப்படுவது கவலைப்படும் அளவுக்கு ‘வொர்த்’ கிடையாது” என்று தனது மனைவி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தது குறித்து பேசினார்.
விஜய்யின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில்,அவரது கட்சியின் பெண் நிர்வாகிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், த.வெ.க கட்சியின் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று த.வெ.க மகளிர் தினம் கொண்டாடப்பட்டதில், விஜய்க்கும் அவரது மனைவிக்கும் இடையே நிலவிவரும் பிரச்சினையை நேரடியாகச் சொல்லாமல், கோடிட்டுக் காட்டும் விதத்தில் குறிப்பிட்டிருந்தது. “அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். அது ‘வொர்த்’ இல்லை” என்று கூறினீர்கள். அந்த ஒரு வாக்கியம்தான் இன்று பல கேள்விகளை எழுப்புகிறது. எது ‘வொர்த்’ இல்லை தலைவா? உங்கள் மனைவியா? அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா?உங்கள் மனைவியை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுகள் பேசப்படும் நேரத்தில், வீட்டிற்கு 6 சிலிண்டர் இலவசமாக தருகிறேன்” என்று மேடையில் பேசுவது ஒரு கடுமையான முரண்பாடாக தெரியவில்லையா?
ஒரு பக்கம் பெண்கள் உயர்வு பற்றி பேசுகிறீர்கள். மற்றொரு பக்கம் பெண்களின் மரியாதையை காக்கும் மொழி கூட உங்கள் வார்த்தைகளில் காணப்படவில்லை என்றால், அந்த அரசியல் எதற்காக? உங்கள் உண்மை முகம்தான் என்ன?”தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே” என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா?
ஒரு நடிகையை கூட்டிக்கொண்டு பொது வெளியில் வரும்போது, அதை பார்த்து இன்றைய இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்? “திருமணத்திற்கு பின்பு நாமும் இப்படியே வாழலாம்” என்ற எண்ணம் அவர்களிடம் விதைக்கப்படாதா? வேலுநாச்சியாரை கொள்கைத் தலைவராக கூறிக்கொண்டு, பெண்ணியம் பேசும் நீங்கள், உங்கள் சொந்த வாழ்க்கையிலும் அந்த கண்ணியத்தை காக்க வேண்டாமா? பெண்ணியம் என்பது மேடையில் முழக்கம் அல்ல. வாழ்க்கையில் ஒழுக்கம்.”பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமனாக சீர் கொடுப்பேன்” என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அது நல்ல எண்ணம். ஆனால், அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா?
நீங்கள் சீர் கொடுக்க வேண்டாம், தலைவா இளைஞர்களை சீர்குலைக்காமல் இருப்பதே சிறந்தது.தமிழக வெற்றிக்கழகத்தில் பயணித்துக்கொண்டே இதை நான் சுட்டிக்காட்டாவிட்டால் அது நம் கழகத்துக்கும், மக்களுக்கும், உங்களை நம்பியிருக்கும் இளைஞர்களுக்கும் நான் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்” என்று ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்.விஜய்க்கு எதிராக கொந்தளித்துள்ள தவெக பெண் நிர்வாகியின் அறிக்கை ரஞ்சனா நாச்சியார் கக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












