தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட்டணி முழுமை அடையாத நிலைதான் இருக்கிறது.
திமுக,அதிமுக ஆகிய இரண்டு முக்கியமான கட்சிகளின் தலைமையில்தான் கூட்டணி அமைந்திருக்கிறது. குஞ்சு குளுவான் கட்சிகள் எல்லாமே இந்த இரண்டு ஆளுமைகளின் ஆதரவுடன் முடிவினை எதிர்நோக்கி இருக்கின்றன.
மூணாவது அணி என்று ஒன்று இல்லை ,நாம் தமிழர் இயக்கத்தைப் போலவே புதிதாக நடிகர் விஜய்யின் த.வெ.கழகம் தனித்தே போட்டியிடுகிறது. 41 மனித உயிர்களை காவு வாங்கிக்கொண்டு நடிகர் விஜய் களம் காணவிருக்கிறார்.
இவரது கடைசிப் படமான ஜனநாயகன் தேர்தல் முடிவுக்குப் பின்னர்தான் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ,மற்றும் விநியோகஸ்தர்கள் பலத்த நட்டத்தை சந்தித்திருக்கிறார்கள்.இத்தகைய வித்தியாசமான சூழலில் தான் தேர்தலை சந்திக்கிறார்கள் விஜய் கட்சியினர்.
இந்த கட்சியினரை மற்ற கட்சியினர் அவ்வளவாக மதிப்பது இல்லை. தற்குறி என கேலி பேசுகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களது நடவடிக்கை இருக்கிறது.
அரசியல் நாகரீகம் என்பது அந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் இல்லை. ரசிகர்களின் விசில் சத்தம் ,கை தட்டல்களுக்காக எதையாவது பேசி வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள்.
புஸ்சி ஆனந்துக்கு அடுத்த இடத்தில் இருப்பதாக கருதப்படும் ஆதவ் அர்ஜுனா என்பவர் பேசியதுதான் தற்போது அந்த கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்திருக்கிறது. திமுக. கூட்டணியின் வெற்றிக்கு வழி அமைத்து கொடுத்திருக்கிறது என்கிறார்கள்.
“திமுக கொடுத்த அழுத்தம் காரணமாக ரஜினி பயந்துபோய் அரசியலுக்கு வரவில்லை ” என்று சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி ஆதவ் பேசியதுதான் த.வெ.க.வின் கழுத்துக்கு சுருக்குக் கயிறாக மாறி இருக்கிறது.
ரஜினி பதில் சொல்லுமளவுக்கு ஆதவ் அர்ஜுனா வொர்த் இல்லை என்றாலும் அவர் சொன்ன பெரும் பொய் ரஜினியின் இமேஜை உரசிப்பார்க்க ஆரம்பித்தது.
கட்சி வேறுபாடின்றி ஆதவ் அர்ஜுனாவை அத்தனை தலைவர்களும் கண்டித்தார்கள். அதன் பின்னரும் த.வெ.க.வின் தலைமை ,அதாவது நடிகர் விஜய் மவுனம் காத்தாரே தவிர ஆதவ் அர்ஜுனாவை கண்டிக்கவில்லை.
ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் . இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர். விஜய்யை விட பன்மடங்கு உயரத்தில் இருக்கிறார். அவரை இழிவுபடுத்தி ஒரு லுச்சா நச்சை கக்கியது தனக்கும் உடன்பாடுதான் என்பதை விஜய் உறுதிப்படுத்தி விட்டார் என நம்புவது தப்பில்லையே!
மன்னிப்பு கேட்பதற்கு ,வருத்தம் தெரிவிப்பதற்கு கால அவகாசம் கொடுத்து பெரிய மனதுடன் காத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி அவை எதுவும் நடக்கவில்லை .விஜய்யின் மவுனமும் சம்மதத்தின் அடையாளமே,என்பதால் இறுதியாக தனது கருத்தை ,கண்டனத்தை ,சாபத்தை கொடுத்து இருக்கிறார் ரஜினிகாந்த்.
ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து பேசிய அத்தனை பேருக்கும் நன்றி சொல்லி விட்டு கடைசியில் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார் ,மென்மையான வார்த்தைகள். உயர்ந்த உள்ளத்தை காட்டியிருக்கிறது.
“காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும். வாழ்க தமிழ்நாடு .வாழ்க தமிழ் மக்கள் , ஜெய் ஹிந்த் !”
அவரது இந்த பதிவு 1996 தேர்தலை நினைவு படுத்துகிறது.
“ஜெயலலிலதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது ” என்று சூப்பர் ஸ்டார் இட்ட சாபம் அதிமுகவை அந்த தேர்தலில் நான்கே இடங்களில் மட்டுமே வெற்றி பெற வைத்தது. போட்டியிட்ட போதெல்லாம் வெற்றியை பார்த்த செங்கோட்டையன் மண்ணை கவ்வியதையும் மறக்க முடியாது. அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திப்பதற்கு காரணமாக இருந்தவர் ரஜினிகாந்த்தான் என்பதை சரித்திரம் பதிவு செய்து கொண்டிருக்கிறது.
மரியாதைக்குரிய மூப்பனாரின் த.மா.காங்கிரசும் திமுகவும் மாபெரும் வெற்றி பெற்றன. முதல்வராக பதவி ஏற்ற கலைஞரை ரஜினி நேரில் வந்து வாழ்த்தினார்
மாபெரும் ரசிகர்களை துப்பாக்கி ஏந்தாத பட்டாளமாக வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் .இவர்களது ஆதரவு திமுகவுக்குத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கை வலுவாக இருக்கிறது.












