பரபரப்பு இல்லையென்றால் கோடம்பாக்கம் களை இழந்து போய்விடும். அதற்கு அவ்வப்போது எந்த வகையிலாவது தீனி கிடைத்து விடுகிறது.நல்லதுதான்!
தற்போது நாட்டில் சட்டப்பேரவை தேர்தல். நீயா நானா என திராவிடக்கட்சிகள் கச்சைக் கட்டிக் கொண்டு களத்தில் நிற்கின்றன.
இந்த தேர்தலின் முக்கியத்துவமே புதிய கட்சியின் வரவினை வைத்து அமைந்து இருக்கிறது.
நடிகர் விஜய் தொடங்கி இருக்கிற தமிழக வெற்றிக் கழகம்தான் ஆட்சியை பிடிக்கப்போகிறது என்கிற மயக்கத்தில் விஜய்யும் அதன் இரண்டாம் கட்ட தலைவர்களும் இருக்கிறார்கள்.
இந்த போதை மயக்கத்தின் மத்தியில் டி.என் .2026.என்கிற பெயரில் ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. நடிகர்களின் நாடாளும் ஆசையை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
குல்கந்த்குமார் என்கிற வடவர் பிழைப்புத் தேடி சென்னை வருகிறார்.அவரை நடிகராக்கி உச்சம் கொண்டு போகிறது தமிழகம். இந்த கூனா குமாருக்கு அவ்வப்போது அட்வைஸ் செய்து முதல்வர் ஆகும் ரேஞ்சுக்கு உருவேற்றுகிறார் தம்பி ராமையா.
பிறகென்ன படம் முழுவதும் நையாண்டி தான்.! நட்டியும் த.ராமையாவும் சேர்ந்து அரசியலை நார் நாராக்குகிறார்கள் .
நடப்பு நடிகர் ஒருவரை நகலெடுத்து நட்டி புரட்டிப்போடுகிறார். எல்லைக்கோடு எதுவும் இல்லாமல் த.ராமையா தாராளமாக விளையாடுகிறார். இதை நாம் செய்தாகவேண்டும் என்கிற உள்ளுணர்வுடன் வசனங்கள் வெளிப்படுகின்றன. இப்படியும் ஒருவர் தமிழுக்கு அவசியம். பாராட்டலாம் .அப்டிப்போடு…. போடு தன்னாலே!
கதாநாயகிகளாக ஷெரிட்டா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ஆகிய மூவர் இருக்கிறார்கள்.அளவுக்கு தகுந்த கேரக்டர்ஸ்.!
ரெடின் கிங்ஸ்லி,எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு இவர்களை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு இயக்குனர் உமாபதி ராமையா களமாட வைத்திருக்கிறார்.
பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்..
தர்புகா சிவா இசைஅமைத்திருக்கிறார்.
நடிகர்களின் நாடாளும் ஆசைதான் கதை. இதற்குள் யார் யாரை இழுத்தால் சுவை இருக்கும் என உணர்ந்து மக்கள் திலகம் உள்ளிட்ட பலரை இழுத்திருக்கிறார். எம்.ஜி.ஆரை தொட்டவர்க்கு விஜய்யை தொட என்ன அச்சம் இருக்கப்போகிறது. இத்தகைய அணுகுமுறை சினிமாவில் இருந்தாக வேண்டும்..
வரவேற்கப்பட வேண்டியபடம்.












