நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் விஜய்யின் த.வெ.க. சார்பில் போட்டியிட உள்ளதாக வீடியோ ஒன்றின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திரையுலகினர் மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வந்த நிலையில்,இது குறித்து ஒரு முக்கியமான முடிவை ஜூன் 11-ந்தேதி காலை 9.30 மணிக்கு அறிவிக்க உள்ளதாக ராகவா லாரன்ஸ் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால்,இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் எதிர்பாராத மறைவையடுத்து இன்று காலை 10 மணிக்கு தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாகவும், தனது எக்ஸ் தளத்தின் மூலம் தெரிவித்து இருந்தார்.அதில், சூழ்நிலைகள் என்னை அரசியலில் நுழைய வேண்டிய ஒரு நிலைக்குக் கொண்டு வந்துள்ளன என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது,”“அனைவருக்கும் வணக்கம்.”கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே.” எதற்கோ காத்துக் கொண்டிருந்த நம்மிடம், இவர் ஏன் இந்த சுலோகத்தைக் கூறுகிறார் என்று பார்க்கிறீர்களா? நீங்கள் எந்த விஷயத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அதற்கு முன்பாக ஒரு சுலோகமும் ஒரு சிறிய கதையும் கூற விரும்புகிறேன். ஏனெனில், இந்த காணொளி முடியும் பொழுது, அந்த சுலோகத்திற்கும் இந்த சிறிய கதைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.”கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே” என்பதுதான் அந்த சுலோகம். அது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பலருக்கும் இந்த சுலோகத்தின் மீது ஒரு சந்தேகம் உள்ளது. “கடமையைச் செய்யச் சொல்கிறார்கள், ஆனால் பலனை எதிர்பார்க்கக் கூடாது என்கிறார்களே; நாம் வேலை செய்கிறோம், அதற்குரிய கூலியை எதிர்பார்க்கக் கூடாதா? இவ்வளவு கடினமாக உழைக்கிறோம், அதற்குரிய ஊதியத்தை எதிர்பார்க்கக் கூடாதா?” என்று பலர் நினைக்கலாம். அந்த சுலோகத்தின் முழுமையான பொருளை விளக்கும் வகையில் ஒரு கதையைக் கூறுகிறேன்.ஒரு பெரிய வீடு; அங்கு ஒரு மிகப்பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருடைய அறையைத் தூய்மை செய்வதற்கு மட்டும் இரண்டு பணியாளர்கள் இருந்தனர். அந்த செல்வந்தருக்கு மிகவும் பிடித்தமான அந்த இரண்டு பணியாளர்கள்தான் அந்த அறையைத் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஒரு நாள் காலையில் அந்த செல்வந்தர் ஆயத்தமாகித் தன் அறையை விட்டு வெளியே வரும் பொழுது, அந்த இருவரில் ஒருவர் தன் பணியை மட்டும் கவனமாகச் செய்துகொண்டிருந்தார். மற்றொரு பணியாளரோ செல்வந்தரிடம் சென்று, “ஐயா, உங்கள் ஆடை மிகவும் நன்றாக இருக்கிறது; நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடி அழகாக இருக்கிறது; நறுமணத் திரவியத்தின் வாசம் மிக அருமையாக உள்ளது; நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். தயவுசெய்து உங்கள் கைப்பையை என்னிடம் கொடுங்கள், நான் எடுத்து வருகிறேன்” என்று கூறி அதனை வாங்கிக்கொண்டு செல்வார். ஆனால், மற்றவர் “வணக்கம் ஐயா” என்று கூறிவிட்டுத் தன் பணியை மட்டுமே செய்வார். நாள்தோறும் இவ்வாறே நடந்து வந்தது.சில காலத்திற்குப் பிறகு, அந்த செல்வந்தர் வெளியூருக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டார். புறப்படும் பொழுது, அந்த இரண்டு பணியாளர்களையும் அழைத்தார். எப்போதும் கைப்பையைத் தூக்கிக்கொண்டு தற்புகழ்ச்சி செய்துகொண்டிருந்த பணியாளருக்கு ஒரு மாத ஊதியத்தை கூடுதலாக வழங்கினார். மற்றொரு பணியாளருக்கு ஒரு வீட்டினை வாங்கிக் கொடுத்துவிட்டு, “நீ என்னுடனேயே வந்துவிடு” என்று கூறித் தன்னுடனேயே அழைத்துச் சென்றார்.
இதைக் கண்ட முதல் பணியாளர் ஓடிவந்து, “ஐயா, நாள்தோறும் நான் தானே உங்கள் கைப்பையைத் தூக்கிக் கொண்டு உங்களைப் புகழ்ந்து பேசினேன். எனக்கு ஏன் கூடுதல் ஊதியம் மட்டும் தந்தீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அந்தச் செல்வந்தர், “நான் உனக்கு அளித்த பணியைச் செம்மையாகச் செய்யாமல், நீ என்னைப் புகழ்ந்து பேசுவதிலேயே கவனம் செலுத்தினாய். ஆனால், அவன் தன் கடமையைச் சரியாகச் செய்தான். கடமையைச் சரியாகச் செய்தால் அதற்குரிய பலனைக் கடவுள் தருவார். அவனுக்குக் கிடைத்த அந்தப் பலன் தான் இந்த வீடு” என்று கூறினார்.இப்பொழுது நாம் செய்திக்கு வருவோம். “திருச்சி கிழக்குத் தொகுதியில் நான் போட்டியிடப் போகிறேனா? இன்று நான் என்ன முடிவு கூறப் போகிறேன்?” என்பதுதானே உங்கள் கேள்வி?நான் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றால், முதலில் நான் ஓர் அரசியல்வாதியாக வேண்டும். நான் அரசியல்வாதியா இல்லையா என்பதைப் பற்றியும், அரசியல் என் வாழ்க்கையில் எவ்வாறு நுழைந்தது என்பதைப் பற்றியும் கூறுகிறேன்.எனது இல்லத்தில் குழந்தைகளை வளர்த்துக்கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்குக் கற்பித்தல், இதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவி செய்தல், ஏழை மாணவர்களைப் படிக்க வைத்தல் மற்றும் விளையாட்டுத் துறையினருக்கு உதவுதல் போன்ற சமூகப் பணிகளை என்னால முடிந்தவரை செய்து வந்தேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். என்னால் முடியாத பட்சத்தில் பிறரிடம் உதவி பெற்று அதனைச் செய்து வந்தேன்.அவ்வேளையில்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்றது. சில விஷயங்களைச் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன். ஜல்லிக்கட்டுப் போராட்டக் களத்திற்கு குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்காக நான் சென்றேன். அதன் பிறகு அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் நீங்கள் அறிந்ததே.அப்பொழுது என் மீது சீமான் அண்ணன் அவர்கள் ஒரு விமர்சனத்தை முன்வைத்தார். அதற்கு நான் ஒரு பதிவை வெளியிட்டேன், அவரும் பதிலளித்தார். அதன் பின்னர்தான் என் வாழ்க்கையில் அரசியல் என்ற சொல்லே நுழைந்தது. “நாம் உணவு வழங்கத்தானே சென்றோம், அதற்குள் இது ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக மாறுகிறது?” என்று நான் வியந்தேன். அப்படியே போச்சு. அதன் பிறகு, ரஜினி சார் அரசியல் பிரவேசம் பற்றிய செய்திகள் வெளியான பொழுது, சீமான் அண்ணன் தரப்பிலிருந்து தலைவரைப் பற்றிப் பேசத் தொடங்கினர். தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் எனக்கு ஒரு குரு போன்றவர்; என்னை வாழ வைத்த தெய்வம்; தந்தை மற்றும் அண்ணன் போன்றவர். அவரைப் பற்றித் தவறாகப் பேசும் பொழுது என்னால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. ஒவ்வொரு முறையும் நான் ரஜினி சாருக்குத் தொலைபேசியில் அழைத்து, “அண்ணே, உங்களைப் பற்றித் தவறாகப் பேசுகிறார்கள்” என்று கூறுவேன். அதற்கு அவர், “அமைதியாக இருங்கள் தம்பி” என்று கூறுவார். இருப்பினும் ஒரு எல்லைக்கு மேல் என்னால் பொறுக்க முடியாமல், ஒரு திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் என் மனதிலுள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். அதனை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.பின்னர் ரஜினி சார் முறைப்படி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். உடனே நான் அவரைச் சந்தித்து, “அரசியலுக்கு வருகிறீர்களா அண்ணே?” என்று கேட்டேன். அதற்கு அவர் “ஆம் தம்பி, நான் வருகிறேன்” என்றார். அது எனக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. என்னை வாழ வைத்தவர் அரசியலுக்கு வரும் பொழுது அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். பின்னர் எனது அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்களை அழைத்துச் சந்தித்தேன்.அவர்களிடம், “தலைவர் அரசியலுக்கு வருகிறார், அவருக்கு ஆதரவாக ஒரு ட்விட்டர் பதிவைத் தயார் செய்யுங்கள்” என்று கூறினேன். அப்பொழுது அங்கிருந்த ஒரு குழுவினர் என்னிடம், “தலைவர் முதலமைச்சர் ஆகிவிட்டால், நீங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகிவிடுவீர்களா? அப்படியென்றால் நாம் பலருக்கு இலவச அறுவை சிகிச்சைகள் செய்யலாம்” என்றனர். மற்றொருவர், “நீங்கள் கல்வித்துறை அமைச்சர் ஆனால் பலரை படிக்க வைக்கலாம்” என்றார். அதற்கு நான், “கடமையைச் செய்ய வேண்டும், பலனை எதிர்பார்க்கக் கூடாது. இத்துறைகள் அனைத்தும் படித்தவர்கள் இருக்க வேண்டிய இடம்; நான் படிக்காதவன். நாம் அனைவரும் இணைந்து கட்சி வளரவும் தலைவர் வெற்றி பெறவும் உழைப்போம்” என்று கூறினேன்.அப்பொழுது மற்றொருவர், “நம்மைத் தொடர்ந்து விமர்சித்து வரும் சீமான் அண்ணனுக்கு எதிராக நீங்கள் போட்டியிடுங்கள்” என்றார். அதற்கு நான், “அது அரசியல் அல்ல; ஒரு தனிநபர் மீதான கோபத்தால் நாம் அரசியலுக்கு வந்தால் அது வெறுப்பு அரசியலாக மாறிவிடும். அரசியல் என்பது மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டுமே இருக்க வேண்டும். கோபத்தால் தப்பான வார்த்தைகள் வெளிவரும் பொழுது மக்கள் நம் மீது வைத்துள்ள மரியாதையை இழந்துவிடுவோம். எனவே, முதலில் மக்கள் பணிகளைச் செய்வோம்” என்று கூறிவிட்டு இல்லத்திற்குச் சென்றேன்.இங்குதான் என் வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. நான் எப்போதுமே என் தாயிடம் ஒரு விஷயத்தைக் கூறுவதற்கு முன்பு அவருக்கு ஒரு வியப்பை ஏற்படுத்துவேன். என் தாய்க்கு நான் கோயில் கட்டியதைக் கூட, அதன் பணிகள் முழுமையாக முடிந்த பின்னர்தான் அவரிடம் காண்பித்தேன். அதேபோல், அரசியல் பிரவேசம் குறித்தும் அவரிடம் கூறினேன். “அம்மா, தலைவர் அரசியலுக்கு வருகிறார்; நானும் அரசியலில் ஈடுபடப் போகிறேன்” என்று கூறி எனது பதிவைக் காண்பித்தேன்.அதனைக் கண்ட என் தாயின் முகம் உடனடியாக மாறியது. அவர் அமைதியாக, “சரி தம்பி, வா வந்து உணவருந்து” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். பொதுவாக ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தைக் கூறினால் மகிழ்ச்சியடைபவர், அன்று ஏன் அவ்வாறு அமைதியாகச் சென்றார் என்று எனக்கு வருத்தமாக இருந்தது.இரண்டு மூன்று நாட்கள் அவர் என்னிடம் பேசவே இல்லை. நான் அவரிடம் சென்று, “அம்மா, என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்? நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை அடித்துவிடு, ஆனால் பேசாமல் இருக்காதே” என்றேன்.
அதற்கு அவர், “தம்பி, நீ அரசியலுக்குச் செல்வது எனக்குப் பிடிக்கவில்லை. அது ஒரு சாக்கடை; அங்கு மக்கள் ஓட்டுப் போடுவதற்குப் பணம் கொடுக்கிறார்கள்; சாதியும் மதமும் அங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே நீ அங்குச் செல்ல வேண்டாம். நம்மை வாழ வைத்த ரஜினி சாரும் இந்த வயதில் நிம்மதியாக இருக்கட்டும், அவரும் அரசியலுக்கு வர வேண்டாம் என்று அவரிடம் கூறு” என்றார்.அம்மாவின் பேச்சை மீறி நான் எந்தச் செயலையும் செய்ய மாட்டேன். ஏனெனில், என் தாய் தான் எனக்கு எல்லாமே; அவர் தான் என் கண்முன்னே வாழும் தெய்வம். இருப்பினும் எனது ரசிகர்களுக்கும் அறக்கட்டளைக் குழந்தைகளுக்கும் நான் கொடுத்த வாக்குறுதி என்னாவது என்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில்தான் கொரோனா பேரிடர் ஏற்பட்டது. இதனால் பரப்புரை செய்ய வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதே சமயம் ரஜினி சாருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அவரால் அரசியலில் ஈடுபட முடியாத சூழல் உருவானது. பின்னர் மருத்துவர்களின் அறிவுரைப்படி தான் அரசியலுக்கு வரவில்லை என்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த அறிவிப்பைக் கேட்டு நாங்கள் அனைவரும் வருத்தமடைந்தோம்.அதன் பிறகு, கொரோனா காலம் முடிந்து எனது “காஞ்சனா” உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. நான் யாருடைய உதவியும் இன்றி எனது சொந்தப் பணத்திலேயே அறக்கட்டளையை நடத்தத் தொடங்கினேன். பின்னர் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒரு விழாவில் அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஒருவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். திடீரென அவர் அலைபேசியை என்னிடம் கொடுத்து, “சீமான் அண்ணன் பேசுகிறார்” என்றார்.அப்பொழுது எனக்கும் அவருக்கும் இடையே ஒரு நிமிடம் அமைதி நிலவியது. பின்னர் நான் “அண்ணே” என்று அழைத்தேன். அதன் பிறகு அவர் என்னையும் எனது நடிப்பையும் பாராட்டித் தள்ளினார். ஜிகர்தண்டா திரைப்படத்தில் நான் நடித்த காட்சிகளைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். அவர் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். மேலும், நான் தொடங்கிய “மாற்றம்” அமைப்பின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் செய்த உதவிகளைப் பாராட்டிப் பத்திரிகையாளர்களிடம் பேசினார். இவ்வாறு ஒரு பெரிய பிரச்சினைக்கு இறைவனே ஒரு சுமுகமான தீர்வை வழங்கினார்.சமீபத்தில் எனது நண்பர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவதாக என்னிடம் கூறினார். அது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ஏனெனில், அவர் எதையும் சிந்தித்துச் செய்யக்கூடிய ஒரு சிறந்த உழைப்பாளி. இதனை எனது தாயிடம் கூறி, “அம்மா, நண்பர் விஜய் அரசியலுக்கு வருகிறார்; நான் அவருக்கு ஆதரவாகச் செயல்படலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நீ முதலில் அவரிடம் ஒரு அப்பாயின்மென்ட் வாங்கு; நான் உன்னுடன் வருகிறேன்” என்றார். அங்குச் சென்று அவர் என்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ, “விஜய் தம்பி, என் மகன் மிகவும் அமைதியானவன்; அவனுக்கு அரசியல் சாக்கடை செட்டாகாது. எனவே அவனுக்கு அரசியல் வேண்டாம் என்று கூறு” என்றார்.இருப்பினும் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அனைத்தையும் புரட்டிப் போட்டுள்ளன. மக்கள் புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது. இதனை என் தாயிடம் காட்டி, “அம்மா, நீ கூறியதை எல்லாம் தாண்டி மக்கள் நல்லவர்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் அல்லவா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம் தம்பி, விஜய் தம்பி எல்லாவற்றையும் மாற்றிவிட்டார். ஒரு நல்ல மனிதர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது; நீ தாராளமாக அரசியலுக்குச் செல்” என்று கூறி என்னை வாழ்த்தினார்.என் தாய் எனக்கு அனுமதி வழங்கிவிட்டார். இப்பொழுது எனது ரசிகர்களிடமும் தமிழ் மக்களிடமும் நான் கேட்கிறேன்: நான் அரசியலுக்கு வரலாமா? அதற்குரிய தகுதி எனக்கு இருக்கிறதா? என்பதை உங்களது கருத்துக்களாக பதிவு செய்யுங்கள்.
இங்கு என்னுடன் இருக்கும் இந்த இளைஞர்கள் தான் எனது 22 ஆண்டுகால உழைப்பு. அரசியலுக்கு வராமலேயே நான் மக்களுக்குச் செய்த சேவையின் சாட்சிகளாக இவர்களை உங்கள் முன் நிறுத்தியுள்ளேன். இவர்களில் ஒருவர் ஒரு வயதாக இருக்கும் பொழுது என்னிடம் வந்தார். இன்று அவருக்கு 22 வயதாகிறது. ஒரு குழந்தையை வளர்ப்பதற்கே எவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படியிருக்க, எனது இல்லத்தில் வைத்து 60 குழந்தைகளை வளர்ப்பதற்கு நான் எவ்வளவு சிரமப்பட்டிருப்பேன் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.இதனை நான் எந்த ஒரு சுயநலமும் இன்றி, “கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே” என்ற கொள்கையின்படி என் மக்களுக்காகச் செய்துள்ளேன். ஏனெனில், மக்களாகிய உங்களால்தான் நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன்.நான் ஏற்கனவே கூறிய கதையின்படி, தர்மத்தின் வழியில் உழைப்பவர்களுக்குரிய பலனைத் தகுந்த நேரத்தில் இறைவன் வழங்குவான். எனவே, நான் அரசியலுக்கு வர வேண்டுமா, வேண்டாமா என்பதை நீங்கள் தான் கூற வேண்டும். உங்களது முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்’.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்












