தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ என அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி (வயது 88), நேற்று மாலை வயது முதிர்வு மற்றும் மாரடைப்பு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.மறைந்த பாடகி எஸ்.ஜானகியின் உடல், அவரது இறுதி விருப்பப்படியே மைசூரிலேயே அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக அமைச்சர் யதீந்திர சித்தராமையா தெரிவித்துள்ளார். மைசூரின் ஹூண்டி பகுதியில் அமைந்துள்ள அவரது பண்ணை வீட்டில் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி அப்போதைய மதராஸ் பிரசிடென்சிக்கு உள்பட்ட குண்டூரில்பல்லேபட்லா என்கிற கிராமத்தில் பிறந்தார் இவர். அப்பா ராமமூர்த்தி, அம்மா சத்தியவதி. 1957 இல் தமிழில் வெளிவந்த விதியின் விளையாட்டு படத்தில் இடம்பெற்ற, பெண் என் ஆசை பாழானது ஏனோ பாடலை பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.சிங்கார வேலனே தேவா.. பாடலின் மூலம் ஜானகியின் புகழ் எங்கும் பரவியது.தனது 3 வயது முதல் பாடல்கள் பாடி வரும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், ஒடியா, துளு, உருது, பஞ்சாபி, கொங்கணி, ஆங்கிலம், ஜாப்பனிஸ், ஜெர்மன், சிங்களம் உள்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 48,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.தமிழில் இசைஞானி இளையராஜாவின் இசையில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார் ஜானகி. இளையராஜா, எம்.எஸ்.வி, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் என அன்று தொடங்கி இன்றைய தலைமுறை இசையமைப்பாளர் வரை பாடியுள்ளார். பெண் குரலில் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பாடியுள்ளார். அதில் ஆண் குழந்தைக்கும் பாடியிருக்கிறார், பெண் குழந்தைக்கும் பாடியிருக்கிறார். 1959 ஆம் ஆண்டு ராம்பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா என்பவர் இவ்வருட தொடக்கத்தில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.முரளி கிருஷ்ணா பிரபலமான பரதநாட்டியக் கலைஞர். நடிப்பின் மீதான ஆர்வத்தால், அவர் ‘விநாயகடு’ மற்றும் ‘மல்லேபூவ்’ போன்ற படங்களில் நடித்திருக்கவும் செய்துள்ளார். அதேபோல், ‘கூலிங் கிளாஸ்’ என்ற கன்னடப் படத்திற்கு எழுத்தாளராகவும் பணியாற்றினார்.மகன் காலமான ஒரு சில மாதங்களிலேயே தற்போது எஸ்.ஜானகியின் மறைவு சினிமா உலகை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மைசூருவில் குடும்பத்துடன் தங்கியிருந்த நிலையில் ஜானகியின் உயிர் பிரிந்தது பாடகி ஜானகியின் மறைவு இந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது












