வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிக்க, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ தொடர் வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் (Amazon Prime Video) வெளியாகிறது. இதன் விளம்பரப் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி பேசும் போது,
“வதந்தி சீசன் 1 கதையை எழுதும் போதே இயக்குநர் ஆண்ட்ரூஸிடம் இரண்டாம் பாகத்திற்கான மதுரை பின்னணி ஐடியா இருந்தது. இதற்காக அவர் பல மாதங்கள் மதுரையில் தங்கி ஆழமான கள ஆய்வு செய்தார். சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’ படத்தை தியேட்டரில் பார்த்து விசிலடித்த நாள் முதல் அவருடன் பணியாற்ற ஆசைப்பட்டோம். மதுரை + சசிகுமார் காம்பினேஷன் என்றாலே கத்தி, அருவாள், ரத்தம் தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தத் தொடரில் அப்படி எந்த வன்முறை அடையாளமும் இருக்காது. ஒரு நிரபராதியைக் காப்பாற்றப் போராடும் ‘மூசா ராசா’ என்ற போலீஸ் கேரக்டரில் சசிகுமார் வாழ்ந்திருக்கிறார்” என்றனர்.
‘வதந்தி சீசன் 2’ தொடரின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் பேசும் போது,
“எதிர்பார்ப்பு இல்லாத போது வதந்தி 1-ஐ இயக்கி வெற்றி பெறச் செய்ததை விட, பலமடங்கு எதிர்பார்ப்பு இருக்கும் இந்த நேரத்தில் சீசன் 2-ஐ ஜெயிக்க வைப்பதுதான் இயக்குநராக எனக்குப் பெரிய சவால். இதற்காகப் படக்குழுவினர் 43 நாட்கள் தொடர்ந்து மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம், திருச்சி ஆகிய இடங்களில் தினமும் 18 மணி நேரம் உழைத்துள்ளனர். சசிகுமார் சார் கதையின் லைனை கேட்டவுடனேயே ஓகே சொன்னார். அதன் பிறகு அவருக்காகவே இந்த மூஸா ராசா கேரக்டரை மீண்டும் மெருகேற்றினேன். இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் பின்னணி இசையாலேயே முழுக் கதையையும் சொல்லும் அசாத்திய கலை நுட்பத்தைக் காட்டியுள்ளார்” என்றார்.
நடிகர் சசிகுமார் பேசும் போது,
“நான் இதுவரை 30 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். ஆனால் யாரும் என்னை போலீஸாக யோசிக்கவில்லை. மதுரை பின்னணி என்றதும் ரௌடி கேரக்டர் என்றுதான் நினைத்தேன். ஆனால் இயக்குநர் என்னை போலீஸ் அதிகாரியாக மாற்றியுள்ளார். கம்பீரமான போலீஸாக இல்லாமல், மதுரையின் யதார்த்தமான சாதாரண போலீஸாக நடிக்க வைத்தார். படப்பிடிப்பில் லேசாகச் சிரித்தால் கூட ‘மூஸா ராசா சிரிக்காது சார்’ என்று இயக்குநர் ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்லிவிடுவார். வழக்கமான த்ரில்லர் கதைகளில் குற்றவாளியை யார் எனத் தேடுவார்கள்; ஆனால் இதில் ‘பாவம் ஹீரோ, போலீஸ் எப்படியாவது இவனைக் காப்பாற்றிக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டுமே’ என்ற பரபரப்பு ரசிகர்களுக்கு இருக்கும்” என்றார்.
நடிகர் விவேக் பிரசன்னா பேசும் போது,
“புஷ்கர் – காயத்ரி தயாரிப்பு ஒரு இரண்டாவது குடும்பம் போன்றது. இயக்குநர் ஆண்ட்ரூஸ் இந்தியாவின் மிகச்சிறந்த எழுத்தாளர். க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸை ரகசியமாக வைக்க எட்டாவது எபிசோட் ஸ்கிரிப்ட்டை படப்பிடிப்புக்கு முந்தைய நாள் இரவுதான் எனக்குக் கொடுத்தார்.’’ என்றார்.












