ஒரு நலிவுற்ற அச்சகத்தில் (Printing Press) வேலை செய்து வரும் தனித்து வாழும் எதார்த்தமான பேச்சுலர் இளைஞனான நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாரை, அவர் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யச் சொல்லித் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார். எங்குத் தேடியும் தங்குவதற்குத் தகுந்த வாடகை வீடு கிடைக்காமல் அவர் தவிக்கும் வேளையில், எதிர்பாராத விதமாக நாயகி காயடு லோஹரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. தனது வீட்டில் இருக்கும் இரு அறைகளில் ஒன்றை வாடகைக்கு விட இருப்பதாக அவர் கூற, அங்கே செல்லும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு, ஒரு வசதியான அடுக்குமாடி குடியிருப்பில் அழகான பெண்ணான காயடு லோஹருடன் தங்கும் அரிய வாய்ப்பு கிடைப்பதால் உடனடியாக அதற்குச் சம்மதம் தெரிவிக்கிறார்.
ஒரு சில நாட்களிலேயே இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. ஆனால், அதற்குப் பிறகு அந்த வீட்டிற்குள் சில மர்மமான மற்றும் அமானுஷ்யமான விசித்திர நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்குகின்றன. உயிருக்கு ஆபத்தான அந்த மர்மச் சூழலில் இருந்து தப்பிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் தீவிரமாக முயற்சித்தாலும், அவரால் அங்கிருந்து வெளியேற முடியாமல் போகிறது. வேறு வழியின்றித் தனது கைப்பேசி மூலமாக வெளியில் இருக்கும் சிலரைத் தொடர்புகொண்டு உதவி கேட்கிறார். இறுதியில், அந்த அமானுஷ்ய குடியிருப்பில் இருந்து நாயகன் தப்பித்தாரா இல்லையா என்ற இறுதித் திருப்பத்தை, சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தித் திரைக்கதை வழியாக விவரிக்கிறார் இயக்குநர் மாரியப்பன் சின்னா.
இப்படத்தின் ஆகப்பெரிய பலமாக அமைந்திருப்பது நாயகி கயாடு லோஹரின் அசாத்திய அழகு, கவர்ச்சி மற்றும் அவரது அட்டகாசமான நடிப்புத் திறன் ஆகும். படம் முழுவதும் தனது அசாத்திய கவர்ச்சியால் பார்வையாளர்களைக் கிரங்கடிக்கும் அவர், உணர்ச்சிமிக்க காட்சிகளிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தித் திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளார். ஆனால், அதற்கு நேர்மாறாக நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நடிப்பதற்குப் பலமான வாய்ப்புகள் இருந்தும், அவரால் தனது நடிப்புத் திறனைப் பெரிதாக வெளிப்படுத்த முடியாமல் போனது படத்திற்கு ஒரு தொய்வாக அமைந்துள்ளது. கதையின் முக்கியக் கட்டங்களில் தேவைப்படும் அச்சம், ஆபத்து மற்றும் அதிர்ச்சி போன்ற அத்தியாவசிய முகபாவனைகளை (Expressions) அவரால சரியாக வெளிப்படுத்த முடியவில்லை. இருப்பினும், துணைக் கதாபாத்திரங்களில் வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த டி.எம்.கார்த்திக், இம்முறை ஒரு வயதான வாலிபராக முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்படி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து லொள்ளு சபா மாறன் மற்றும் ஆதித்யா கதிர் ஆகியோரின் எதார்த்தமான நகைச்சுவைப் பங்களிப்பு படத்திற்குப் பலமாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் தனது நேர்த்தியான கேமரா கோணங்கள் வழியாக நாயகி கயாடு லோஹரின் அழகையும், கவர்ச்சியையும் மிக நேர்த்தியாகப் படம்பிடித்து ரசிகர்களுக்கு ஒரு மெகா காட்சி விருந்தாகப் படைத்துள்ளார்.
ஆனால், அந்த விஷுவல் பலத்திற்குப் பின்னடைவாக சாம் சி.எஸ்.ஸின் இசையமைப்பில் அமைந்த பாடல்கள் எதுவும் மனதில் நிற்கும்படி அமையவில்லை. மேலும், அவரது பின்னணி இசையில் பெரும்பாலான இடங்களில் தேவையற்ற இரைச்சல்களே மிஞ்சுவதோடு, காட்சிகளுக்கு ஏற்ற பேக்ரவுண்ட் ஸ்கோர் சுத்தமாக எடுபடாமல் போனது படத்திற்கான ஒரு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.
கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா, ஒரு புதுமையான ஃபேண்டஸி கருவைக் கையில் எடுத்திருந்தாலும், அவரோட திரைக்கதை அமைப்பு பெரிய அளவில் திரையில் எடுபடவில்லை. கயாடு லோஹரின் கவர்ச்சியான காட்சிகள் மட்டுமே வணிக ரீதியாக ரசிகர்களை ஓரளவுக்குத் திருப்திப்படுத்துகின்றன. 1000 வருடப் பழமையான வரலாற்றுப் பின்னணியை இன்னும் ஆழமாகக் கையாண்டிருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் இப்படத்தின் கிளைமாக்ஸ் (Climax) காட்சிகள் பார்வையாளர்களுக்கு ஒரு பெருத்த ஏமாற்றத்தையே அளிக்கின்றன.
சுருக்கமாகச் சொன்னால், பலவீனமான திரைக்கதை மற்றும் இரைச்சலான பின்னணி இசையால் தடம்மாறிய இத்திரைப்படம், கயாடு லோஹரின் கவர்ச்சி ஆட்டத்திற்காகவும், அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவிற்காகவும் ஒருமுறை மட்டும் பார்க்கலாம்.












