வயது முதிர்ந்தும் திருமணம் செய்துகொள்ளாமல், கேட்டரிங் தொழில் செய்துவரும் ஜஸ்டின் (நிவின் பாலி) என்ற எதார்த்தமான மனிதனைச் சுற்றியே இத்திரைப்படத்தின் கதைக்களம் நகர்கிறது. உறவினர்களுக்கும், சுற்றத்தாருக்கும் எல்லா நேரத்திலும் உதவும் ஒரு நம்பிக்கையான மனிதனாக வலம் வரும் அவனது வாழ்வில், திருமணம் என்பது மட்டும் இன்னும் ஒரு முற்றுப்பெறாத அத்தியாயமாகவே நீடிக்கிறது. அவனது பக்கத்து வீட்டில் தான் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டுவிட்டுப் புதியதொரு சூழலில் தனது குடும்பத்துடன் குடியேறுகிறார் ஆஷ்லே (மமிதா பைஜு) என்ற இளம்பெண்.
ஆஷ்லே, ஆரம்பத்தில் தனது பழைய நினைவுகளில் தவிக்கிறார். அப்போது ஜஸ்டினுடன் ஏற்படும் எதார்த்தமான பழக்கம் அவளுக்குப் பெரும் ஆறுதலாக மாறுகிறது. இவர்களது உறவு எதார்த்தமான உரையாடல்கள், பொதுவான இசை ரசனைகள், சிறிய அன்பான சைகைகள் மற்றும் ஒருவரை ஒருவர் ஆழமாகப் புரிந்துகொள்ளும் நேர்த்தியான தருணங்கள் மூலம் மிக மெதுவாக சென்று அது காதலாக மலர்கிறது. இவர்களது காதல் சமூகத்தின் பாரம்பரியக் கட்டுக்கோப்புகளையும், குடும்பங்களின் எதிர்பார்ப்புகளையும் எதிர்கொள்ளும் போது முரண்பாடு வெடிக்கிறது. இவர்களுக்கு இடையே இருக்கும் பெரிய வயது வித்தியாசம் இயல்பாகவே ஒரு விவாதப் பொருளாக மாற, அதனைச் சுற்றியுள்ள மனிதர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை இயக்குநர் குடும்ப உறவுகளின் பின்னணியிலும் தனிமனித உணர்வுகளின் வழியிலும் மிக நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளார்.
இயக்குநர் கிரிஷ் ஏ.டி. எந்தவொரு காட்சியையும் தேவையற்ற பில்டப்கள் மூலமாகவோ அல்லது செயற்கையான நாடகத்தனம் மூலமாகவோ பிரம்மாண்டமாகக் காட்டாமல் கதாபாத்திரங்களை அவற்றின் இயல்பான சூழலில் உலவ விட்டிருக்கிறார். குறிப்பாக, வயது வித்தியாசக் காதலை வக்கிரமின்றி இயல்பாகவும், இனிமையாகவும் கையாண்டுள்ளார்.
இப்படத்தின் அசாத்திய வெற்றிக்கு நடிகர்களின் பங்களிப்பு ஒரு மிக முக்கியக் காரணமாகும். ஜஸ்டின் கதாபாத்திரத்திற்கு நிவின் பாலி தனது முதிர்ச்சியான நடிப்பால் உயிர் கொடுத்துள்ளார். அவருக்கு இணையாகத் தனித்துவமான அடையாளத்துடன் வரும் மமிதா பைஜு, முகபாவனைகள் மூலமாகவே ஆஷ்லேவின் குறும்புத்தனத்தையும், உள்மனக் குழப்பங்களையும் மிக எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார். துணைக் கதாபாத்திரங்களாக வரும் குடும்பத்தினரும் நண்பர்களும் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து கச்சிதமாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபுவின் கேமரா கோணங்கள் மிகவும் எதார்த்தமானதாகவும், கதாபாத்திரங்களின் போக்கினையும் இயல்பான முறையில் காட்சிப்படுத்தியுள்ளன.
இந்த எதார்த்தமான காட்சி வடிவத்திற்கு இசையமைப்பாளர் விஷ்ணு விஜய்யின் பின்னணி இசை மேலும் வலுசேர்த்துள்ளது. கதையின் உணர்வுப்பூர்வமான மாற்றங்களுக்கு ஏற்ப, இவரது மெல்லிய மெலடி இசையும் பாடல்களும் காட்சிகளுக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளன.
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, கதாபாத்திரங்களின் வலுவான வடிவமைப்பால் இத்திரைப்படம் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து ஒரு தரமான சினிமா அனுபவத்தை வழங்கியுள்ளது.












