
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள கமர்ஷியல் ஆக்ஷன் டிராமா திரைப்படமான ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, சாண்டி டாக்கீஸ் சார்பில் லெனின் மாதேஸ்வரன் மற்றும் அசசி கிரியேசன்ஸ் சார்பில் அமுதா லியோனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் முன்வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய கதாநாயகன் லியோ சிவக்குமார்,
ஒன்பது ஆண்டுகாலப் போராட்டமும் பல நிராகரிப்புகளையும் தாண்டி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக இயக்குநர் நானியுடன் இணைந்து கடுமையாக உழைத்ததாக உணர்ச்சிகரமாகக் குறிப்பிட்டார். குறும்படங்களில் நடித்துப் பல முயற்சிகளுக்குப் பிறகே திரைத்துறைக்கு வந்ததாகவும், திரைத்துறைக்கு வந்த பின்னரே தந்தையின் பெயர் தன்னுடன் இணைந்ததாகவும் கூறிய அவர், தன்னைத் தந்தையின் அடையாளத்தின் வழியாகப் பார்க்காமல் ஒரு தனித்துவமான கலைஞனாகப் பார்க்க வேண்டும் என்றும், படத்தில் தவறு இருந்தால் விமர்சிக்கவும் நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் வேண்டும் என்றும் நெகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டார். மேலும், இப்படத்தில் துஷ்யந்த் இன்னொரு ஹீரோவாக நடித்திருப்பதாகவும், குறும்பட காலத்திலிருந்தே அறிமுகமான பிரிகிடாவுடன் இணைந்து நடித்ததும், ராதிகா சரத்குமாருடன் பணியாற்றியதும் சிறந்த அனுபவமாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
விழாவில் பேசிய நடிகை பிரிகிடா சாகா,
இப்படத்தில் தான் ஏற்கெனவே நடித்துப் பிரபலமான ‘பவி டீச்சர்’ கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையிலான வேடத்தில் நடித்துள்ளதாகவும், நீண்ட கால நண்பரான லியோ சிவக்குமாரின் ஆக்ஷன் மற்றும் நடிப்பு இதில் சிறப்பாக வந்துள்ளதாகவும் பாராட்டினார். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையில் ‘செங்காத்து’ பாடலும், நடன இயக்குநர் மனோஜ் அமைத்த ஹூக் ஸ்டெப்பும் தனக்கு மிகவும் பிடித்தமானவை எனக் கூறிய அவர், ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தில் தனது நடிப்பைப் பாராட்டிய நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகர் துஷ்யந்த்,
தன்னுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நானியின் இயக்கத்தில், இதுவரை முயற்சி செய்யாத முழுமையான ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், அதிகாலைப் படப்பிடிப்பிலும் சுறுசுறுப்பாக நடித்து ஆச்சரியப்படுத்திய தனது மகளாக நடித்த சிறுமி அஞ்சலிக்குத் திரைத்துறையில் சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நானி பேசுகையில்,
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லியோ சிவக்குமாரிடம் சொன்ன கதை, தயாரிப்பாளர் மாதேஸ்வரனின் ஆதரவால் தற்போது நனவாகியுள்ளதாகவும், ராதிகா சரத்குமார், உதயா, விஷால் மற்றும் ஏழு புதுமுகக் கலைஞர்களுடன் உருவான இப்படத்தைப் பார்த்த இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்டோர் பாராட்டியது மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். எடிட்டர் வசந்த், சண்டைப் பயிற்சி இயக்குநர் ஃபீனிக்ஸ் பிரபு உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளில் வந்து ஆதரிக்க வேண்டும் எனப் படக்குழுவினர் கேட்டுக்கொண்டனர்.












