தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று காலை ஒன்றுகூடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனங்களான கியூப், யு எப் ஓ,,பிஎக்ஸ் டி , சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் திரைப்படங்களை திரையிட ‘விபிஎப்’ என்ற பெயரில் இல்லாத ஒரு கட்டணத்தை தயாரிப்பாளர்களிடம் வசூல் செய்து வருகிறார்கள்.
ஒரு திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட முக்கிய தேவை புரஜெக்டர் தான். அந்த புரஜெக்டர் இல்லை என்றால், அது சாதாரண மண்டபம் ஆகும். புரஜெக்டரை, திரையரங்க உரிமையாளர்கள் தான் வாடகைக்கு எடுத்து உள்ளார்கள். ஆனால் அந்த புராஜெக்டர்கான வாடகையை திரையரங்க உரிமையாளர்களிடம் கேட்டு வாங்காமல், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் இடத்தில் மட்டுமே வசூல் செய்து வருகிறார்கள். மேலும், வேறு எந்த ஒரு நாட்டிலும் திரைப்படங்களை திரையிட வி பிஎஃப் என்கிற பெயரில் கட்டணம் வசூல் செய்வதில்லை.
ஆனால் இந்தியாவில் மட்டுமே இப்படி ஒரு செயல் நடந்து வருகிறது. டிஜிட்டல் நிறுவனங்கள் செய்யும் இந்த செயலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது மேலும் விபிஎஃப் கட்டணம் குறித்து டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, பல முறை அழைத்தாலும், அதற்கு சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை. மேலும், தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனங்கள் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த அழைத்த போதும், அதற்கும் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் எத்தனை புரஜெக்டர் சொந்தமாக உள்ளது, மற்றும் எத்தனை புரஜெக்டர்கள் வாடகைக்கு உள்ளது என்ற விவரம் கேட்டிருந்தோம். டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனங்கள் இதுநாள்வரை அளிக்கவில்லை. விபிஎப் கட்டணம் குறித்து கேட்டால் மட்டும், தயாரிப்பாளர்களான நீங்கள்தான் திரையரங்க உரிமையாளர்களிடம் பேச வேண்டும் எனக் கூறி வருகிறார்கள்.
திரையரங்கிற்கு புரஜெக்டர் அளிப்பது டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனங்கள். அதற்கு வாடகை கட்ட வேண்டியது திரையரங்க உரிமையாளர்கள். ஆனால் அந்த கட்டணத்தை தயாரிப்பாளர்கள் கட்ட வேண்டும் என்று கூறி டிஜிட்டல் நிறுவனங்கள் வற்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? இந்த டிஜிட்டல் நிறுவனங்கள் ஆங்கில படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடும் போது வி பிஎஃப் கட்டணம் வாங்குவதில்லை. ஆனால் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டும் ஏன் தயாரிப்பாளர்களிடமிருந்து வசூல் செய்கிறார்கள். எனவே, டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனங்கள் புராஜெக்டருக்கு உண்டான வாடகையை இனி திரையரங்க உரிமையாளர்களிடம் இருந்து மட்டுமே பெற்றுக் கொள்வோம் என்று உடனடியாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காத பட்சத்தில் இனி தயாரிப்பாளர்கள் யாரும் வி பிஎஃப் கட்டணம் செலுத்த மாட்டார்கள் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏகமனதாக முடிவு எடுத்துள்ளது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது













