தமிழ்த்திரையுலகில் கடந்த 2018-ல் வெளியான ‘8 தோட்டாக்கள்’,படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வெற்றி. இதில் வெற்றி,எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரின் நடிப்பும்,இதன் வித்தியாசமான திரைக்கதையும் பலராலும் பாராட்டுப்பெற்று பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் வெற்றி நடிப்பில் வனம் திரைப்படம் வெளியாகியுள்ளது. தன் திரையுலக பயணம் குறித்துநடிகர் வெற்றி கூறும்போது, ‘‘‘வனம்’ படத்தில் சிற்பக் கலை மாணவனாக நடித்தது புது அனுபவமாக இருந்தது. . 1980 க்கு பிறகு கவின் கல்லூரியில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சிறப்பு அனுமதியுடன் எங்கள் படப்பிடிப்பு நடைப்பெற்றது. நடிகர் சிவகுமார், இயக்குநர் பா.ரஞ்சித் போன்ற ஆளுமைகள் அந்த கல்லூரியில் படித்தவர்கள் என்று அறிந்தபோது சந்தோஷமாக இருந்தது.
நான் குறிப்பிட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்றோ, அல்லது எனக்கென்று தனி பாணியுடன் நடிக்க வேண்டும் என்றோ நினைக்கமாட்டேன். என்னை பொறுத்தவரை நான் ஒரு கருவி மட்டுமே. என்னுடைய இயக்குநர்கள்தான் எல்லோரும் ரசிக்கும் விதமாக மக்கள் முன் என்னை கொண்டுபோய் நிறுத்துகிறார்கள். அந்த வகையில் ஒரு இயக்குநரின் நடிகராகவே என்னை வெளிப்படுத்த விரும்புகிறேன்’’ என்ற வெற்றிக்கு பாலா, அமீர், வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க விருப்பமாம்.
தற்போது வெற்றி, ‘மெமரீஸ்‘, ‘ஜோதி’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இப் படங்களின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் வெளியாக உள்ளது. அத்துடன் ‘ஜீ.வி’ இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தை ‘மாநாடு’ சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.













