சென்னை நீலங்கரையை அடுத்த பனையூரில் உள்ள மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் நேற்று தனது ரசிகர்களைச் சந்தித்தார். தமிழகத்தில் 200 முதல் 400 நாட்களுக்கு மேலாக பொதுமக்களுக்கு இலவசமாக விலையில்லா விருந்தகம் நடத்தும் விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்தார்.
அப்போது நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்த நடிகர் விஜய், இந்த விலையில்லா விருந்தகம் உதவியை செய்ய மேலும் பணம் வேண்டும் என்றால் என்னிடம் கேளுங்கள் உதவி செய்கிறேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்தடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள திட்டமிட இருப்பதாகவும், அதனை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் ரசிகர்களிடம் விஜய் கேட்டுக்கொண்டார்.
சுமார் 2 மணி நேரம் நடந்த சந்திப்பில், புதிதாக சில நலத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என விஜய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் போது, ரசிகர் ஒருவர் தனது நெஞ்சில் ஆட்டோகிராப் கேட்டு, அதை பச்சை குத்த போகிறேன் என்று கூறிய போது, அது தவறு இந்த மாதிரி தவறை செய்யாதீர்கள் எனக்கூறி வெள்ளை காகிதத்தில் ஆட்ரோகிராப் போட்டு கொடுத்துள்ளார்
மேலும் தொடர்ந்து மக்கள் பணிகளை செய்ய அவர் அறிவுறுத்தியதாகவும் வழக்கம்போல் கூட்டத்திற்கு வரும் இன்னோவா காரில் வராமல் எளிமையான காரில் வந்ததாகவும் கூறப்படுகிறது.













