நிக் ஆர்ட்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்து வந்தவர் பிரபல படத்தயாரிப்பாளர் எஸ். எஸ். சக்கரவர்த்தி. இவர் அஜித்தின் நடிப்பில் வெளியான வாலி, முகவரி, வில்லன், வரலாறு, விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு, சிம்பு நடிப்பில் வெளியான காளை உட்பட பல படங்களைத் தயாரித்துள்ளார்.மேலும் தனது மகன் ஜான் கதாநாயகனாக நடித்த ரேனிகுண்டா என்ற திரைப்படத்தை தயாரித்தார். தொடர்ந்து மீண்டும் தன்னுடைய மகன் நடிப்பில் 18 வயசு படத்தை தயாரித்தார்.
ஆனால் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. அதேபோல் சிம்பு நடிப்பில் தொடங்கிய வேட்டை மன்னன் திரைப்படமும் நிதி சிக்கல் காரணமாக பாதியிலேயே நின்றது.இதன் காரணமாக எஸ்.எஸ்.சக்கரவர்த்தி படத்தயாரிப்பிலிருந்து விலகி இருந்தார். இறுதியாக விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற இணைய தொடரில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், எஸ்.எஸ்.சக்கரவர்த்தி கடந்த 8 மாதங்களாக புற்று நோய் காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு காலமானார். அவரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்.எஸ் சக்கரவர்த்தி உடலுக்கு கவிஞர் வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.