கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம்,சத்யா,அபூர்வ சகோதரர்கள் மைக்கேல் மதனகாமராஜன் .குணா, கலைஞன் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளவர் ஆர்,எஸ் சிவாஜி (வயது 67) பிரபல இயக்குனர் சந்தானபாரதியின் தம்பியான இவர் குடும்பத்துடன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய் ராம் காலனியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சென்னை உலகதிரைப்படவிழாவில் கலந்து கொண்டார். .
இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.அவரது மரணம் திரையுலகினர் மத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரது மறைவுக்கு கமல்ஹாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது,”எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் ஆர். எஸ். சிவாஜி,எல்லிஸ் ஆர். டங்கனின் மீரா (1945) உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய நடிகரும் தயாரிப்பாளருமான எம். ஆர். சந்தானத்தின் மகன்தான் . இவரது சகோதரரான சந்தான பாரதியும் பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனரும் ஆவார், இவர் தமிழ் திரைப்படத் துறையில் சினிமாவில் பணியாற்றிவருகிறார்.ஆர்.எஸ்.சிவாஜி 1980 மற்றும் 90 களில் கமல்ஹாசனின் படங்களில் தவறாமல் நடித்தார். இவர் அபூர்வ சகோதரர்கள் (1989) படத்தில் ஜனகராஜை பார்த்து ,தெய்வமே ! நீங்க எங்கயோ போயிட்டீங்க என்று பேசிய வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
இவர் நயன்தாராவின் தந்தையாக கோலமவு கோகிலா படத்திலும், விவேக்கின் உதவியாளராக தாராள பிரபு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள ‘லக்கி மேன்’ படத்திலும் நடித்துள்ளார்.பன்னீர் புஷ்பங்கள் படத்தில் தான் முதல் முதலில் நடிகராக அறிமுகமானார்.கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பல ஆண்டுகளாக பணியாற்றிவந்துள்ளார். மேலும் தமிழ் திரைப்படத் துறையில் உதவி இயக்குநர், சவுண்ட் டிசைனர் என பல்வேறு துறைகளில் இயங்கி வந்திருக்கிறார். கடந்த ஆண்டு சாய் பல்லவியின் அப்பாவாக நடித்த கார்கி படம் மூலம் தன் நடிப்புக்காக பாராட்டுகளைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.













